தென் ஆப்பிரிக்கா நொருங்கியது; வரலாற்றை மாற்றிக் காட்டி இந்தியா வாகை சூடியது..

0
461 views


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வரலாற்றை மாற்றிக் காட்டி இந்தியா வாகை சூடியது. உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று மெல்போர்னில் அரங்கேறிய முக்கியமான லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தின. நடப்பு சாம்பியன் இந்தியாவுக்கு லீக் சுற்றில் இது தான் உண்மையான சவால் நிறைந்த ஆட்டமாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை என்றே ஆட்டம் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் 76 ரன்கள் வித்தியாசத்தில்
பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா மிகுந்த நம்பிக்கையுடனே ஆட்டத்தை தொடங்கியது.

ஷிகர் தவான் அசத்தல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணி தொடக்கம் முதல் நிதானமே காட்டியது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 6 பந்துகளை எதிர்க்கொண்ட நிலையில் ரன்அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். இதனையடுத்து விராட் கோலியும், தவானும் இந்திய அணிக்கு ரன் சேர்த்தனர். இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டம் மூலம் இந்தியாவின் ரன் கணக்கை 100-ஐ தாண்ட செய்தனர். இந்தியா 27.1 ஓவரில் 136 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி 46 ரன்களில் (60 பந்துக்கள் 3*4, 0*6) அவுட் ஆனார். இம்ரான் பந்துவீச்சில் ஷாட் அடித்தபோது கேட்ச் கொடுத்து விராட் கோலி அவுட் ஆனார். போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பீல்டிங்கில் ஆதிக்கம் செலுத்தினர். விராட் கோலி அவுட் ஆனதும் ஷிகர் தவானுடன் கைகோர்த்த ரெகானேவும் நிதானமாக ஆடினார். வலுவான பந்துவீச்சும், நல்ல பீல்டிங்கும் கொண்ட தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தவான் அபாரமாக சதம் அடித்தார். ஷிகர் தவான் சதம் அடித்த அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்றது என்பதையே புள்ளிவிவரங்கள் காட்டின. அது இன்றும் உண்மையாகியுள்ளது. உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக விமர்சனங்களை வாங்கிகட்டிய தவான் தற்போது தனது பேட்டிங் மூலம் பதில் கொடுத்து வருகிறார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போடியிலும் தவான் (ரன்–அவுட்) 73 ரன்கள் எடுத்தார்.

இந்தியா 40.2 ஓவர்கள் கடந்திருந்தபோது 2 விக்கெட்களை இழந்து 235 ரன்கள் எடுத்தது. தவான் 134 ரன்களுடனும், ரெகானே 49 ரன்களுடனும் விளையாடினர். தவான் இரண்டு சிக்சர்களை அடித்து ரசிகர்களை உற்சாகம் அடைய செய்தார். 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தவான் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 146 பந்துக்களை எதிர்க்கொண்ட தவான் 16 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என மொத்தம் 137 ரன்கள் அடித்து இந்திய அணியை வலுவான நிலையை அடைய செய்தார். உலக கோப்பை கிரிக்கெட்போட்டியில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில்.அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தவான் பதிவு செய்தார். கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் போடியில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் ஸ்டீபென் 134 ரன்கள் எடுத்ததே அதிகம் என இருந்தது. இந்தியா 307 ரன்கள் குவிப்பு. தவானை அடுத்து களமிறங்கிய ரெய்னா மோர்கல் பந்துவீச்சில் ஷாட் அடித்தபோது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து கேப்டன் டோனி களமிறங்கினார்.

ரெகானேவும் கேப்டன் டோனியும் இணைந்து விளையாடினர். இந்தியாவின் அதிரடி ரன்குவிப்பை கடைசி நேரத்தில் தென் ஆப்பிரிக்கா தடுத்தது. தொடக்கத்தில் நிதானம் காட்டி ஆடிய இந்திய வீரர்கள் இறுதியில் சற்று சொதப்பினர். பொறுப்பான ஆட்டத்தினால் இந்தியாவிற்கு ரன்குவித்த ரெகானே 79 ரன்களில் (60 பந்துக்கள் 7*4, 3*6) ஸ்டெயின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதனையடுத்து களமிறங்கிய ஜடேஜாவும் ஏமாற்றமே அளித்தார். 2 ரன்களில் ரன் அவுட் ஆனார். இந்திய அணி கேப்டன் தோனி ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசினார். கேப்டன் டோனி 18 ரன்னில் மோர்கல் பந்துவீச்சில் அவுட் ஆனார். இந்திய அணி 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்களை இழந்து 307 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 5 ரன்களுடனும், முகமது சமி 4 ரன்களுடனும் இறுதியில் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இந்தியா 308 ரன்கள் தென் ஆப்பிரிக்காவிற்கு வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம் இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து விளையாடியது. தென் ஆப்பிரிக்கா வீரர்கள் ரன்சேர்ப்பதில் ஆதிக்கம் செலுத்த முயன்றனர். ஆனால் அதற்கு இந்திய அணி பலனில்லாமல் செய்துவிட்டது. இந்தியாவின் பந்துவீச்சுக்கு தென் ஆப்பிரிக்கா அணி அடிபணிந்தது. தொடக்க ஆட்டக்காரர் அம்லா மொகித் சர்மா பந்துவீச்சில் ஷாட் அடித்தபோது பந்து லாவாகமாக முகமது சமியின் கையில் விழுந்தது. அம்லா 22 ரன்களில் அவுட் ஆனார். கோக் முகமது சமி பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து 7 ரன்களில் நடையை கட்டினார். டிவில்லியர்ஸ் 22.5 ஓவரில் ஜடேஜா பந்தை அடித்தார். பந்து சற்று தொலைவில் சென்றதும் சர்மா வசம் வந்தது. உடனடியாக சர்மா பந்தை வீச கேப்டன் டோனி அற்புதமாக அவுட் செய்து டிவில்லியர்ஸை வெளியேற்றினார். இந்தியாவிற்கு திருப்புமுனை இதனையடுத்து பிளிஸ்சிஸ், டேவிட் மில்லர் நிதானமாக விளையாடினர். அரைசதம் கடந்து விளையாடிய பிளிஸ்சிஸ் நிலைக்கவில்லை. 55 ரன்களில் ஷாட் அடிக்க முயன்றபோது தவான் கேட்ச் பிடிக்க அவுட் ஆகி நடையை கட்டினார்.

இதனையடுத்து களமிறங்கிய டுமினி 33.1 வது ஓவரில் அஸ்வின் பந்துவீச்சில் ஷாட் அடிக்க ரெய்னா கேட்ச் பிடித்தார். இதனையடுத்து டுமினி 6 ரன்களுடன் வெளியேறினார். தென் ஆப்பிரிக்கா 32 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை இழந்து 148 ரன்கள் எடுத்து விளையாடியது. தென் ஆப்பிரிக்காவின் அபாயகரமான வீரர்கள் பிளிஸ்சிஸ், டிவில்லியர்ஸ் அவுட் ஆனது இந்தியாவின் வெற்றிக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. மில்லர் 22 ரன்களில் ரன்அவுட் ஆனார். பிலாண்டர் ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்துவீச்சில் எம்.பி.டபிள்யூ. ஆனார். ஸ்டெயின் ஒரு ரன்னிலும், மோர்கல் 2 ரன்களிலும், தாஹிர் 8 ரன்களிலும் அவுட் ஆனார்கள். தென் ஆப்பிரிக்கா 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியில் பர்னல் மட்டும் ஆட்டமிழக்காமல் இறுதியில் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்தியா வரலாற்றை மாற்றியது தவான், ரெகானே, கோலி ஆகிய இந்திய பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடி, தென்ஆப்பிரிக்காவின் அஸ்திவாரத்தை சுலபமாக அசைத்துவிட்டனர். இந்திய அணி உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்காவை இதுவரை சந்தித்த மூன்று ஆட்டங்களிலும் (1992, 1999, 2011) தோல்வியையே சந்தித்து இருந்ததுது. மூன்று முறையும் இந்திய அணி முதலில் தான் பேட் செய்தது. ஆனால் இந்த தடவை இந்திய வீரர்கள் வரலாற்றை மாற்றிக் காட்டியுள்ளது. ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி கொண்டுள்ளனர். இன்றைய ஆட்டத்தில் இந்தியா வாகை சூடி உள்ளதால், இந்தியா மீதான நம்பிக்கை பல மடங்கு கூடியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here