யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய ‘உலகப்புகழ் பெற்ற 10 உதைபந்தாட்ட வீரர்கள்’ நூல் வெளியீட்டு விழா.

0
988 views
டென்மார்க் வாழ் ஈழப்படைப்பாளி கி.செ.துரை அவர்கள் ஏற்கனவே 32 நூல்களை எழுதி வெளியிட்டவர். அவரது இன்னுமொரு படைப்பே ‘உலகப்புகழ் பெற்ற 10 உதைபந்தாட்ட வீரர்கள்’ நூல். இந்நூலின் வெளியீட்டு விழாவானது 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு ஈழத்தின் யாழ்ப்பாணத்திலமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமானது. ‘அக்கினிச் சிறகுகள்’ அமைப்பின் முதல் வெளியீடான இந்நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.  ‘அக்கினிச் சிறகுகள்’ அமைப்பின் தலைவர் செ.அரவிந்தன் நிகழ்விற்கு தலைமை வகித்தார்.
முன்னதாக பங்கேற்பாளர்கள் நாதஸ்வர இசையுடன் அழைத்து வரப்பட்டனர். சுடர்கள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தமிழ்மொழி வாழ்த்தினை யாழ்.சுழிபுரம் யோகி கார்த்திகேசு அறநெறிப் பாடசாலை மாணவிகள் இசைத்தனர். வரவேற்பு நடனத்தினை நே.பிரியந்தி வழங்கினார். வரவேற்புரையினை ஓய்வுநிலை அதிபர் சரோஜினி கனகரத்தினம் வழங்கினார். தலைமையுரையைத் தொடர்ந்து நூல் அறிமுக உரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார். வாழ்த்துரைகளை டென்மார்க் படைப்பாளி தருமன் தருமகுலசிங்கம், அகில இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளன முன்னாள் தலைவர் றஞ்சித் ரொட்ரிக்கோ ஆகியோர் அளித்தனர்.
நூலினை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட முதற்பிரதியினை வீரகேசரி வாரமலர் முன்னாள் பிரதம ஆசிரியர் வீ.தேவராஜ் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து யாவர்க்கும் நூற்பிரதிகள் வழங்கப்பட்டன. வவுனியா ‘தமிழ் விருட்சம்’ அமைப்பு சார்பாக கவிஞர் மாணிக்கம் ஜெகன் நூலாசிரியருக்கான கெளரவம் அளித்தார். மாணவி பா.தர்சினி அவர்களின் நடனக்காட்சியும் நிகழ்வினை அலங்கரித்தது.
நிகழ்வில் வல்வை உதைபந்தாட்ட சம்மேளனத்திற்கான கெளரவிப்பு,  ஈழத்தில் உதைபந்தாட்டத்தில் சாதனை நிகழ்த்தியோருக்கான ‘தங்கச் சிறகுகள்’ விருதளித்து கெளரவிப்பு என்பனவும் இடம்பெற்றன.
நூலின் ஆய்வுரையினை துணுக்காய் பிரதேச கலாசார உத்தியோகத்தர் கு.ரஜீபன் நிகழ்த்தினார்.
பிரதம விருந்தினர் உரையினை வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்தினார்.
‘தமிழர் நடுவம்’ தமிழ்நாட்டுச் செயலாளர் செல்லப்பாண்டியர், ‘தமிழர் நடுவம்’ சிங்கப்பூர் கிளையின் மு.நாகேஸ்பாண்டியர், தமிழன் தொலைக்காட்சியின் கலாநிதி தமிழ் சிலம்பரசன், ‘தமிழர் நடுவம்’ தமிழ்நாட்டு ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் பாண்டியர், ‘ரியூப் தமிழ்’ பண்பலை  இயக்குநர் தர்சிகன்  ஆகியோரும் நூலாசிரியருக்கான கெளரவம் வழங்கி மதிப்பளித்தனர்.
ஏற்புரையினை நூலாசிரியர் கி.செ.துரை ஆற்றினார். ‘ரியூப் தமிழ்’ ஊடக அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கவிஞர் யாழ்.சபேசன், அறிவிப்பாளர் இரா.இராஜேஷ்வரன், அறிவிப்பாளர் அ.பானுசா, அறிவிப்பாளர் பிரியமதா பயஸ், அறிவிப்பாளர் ர.ராகுலன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து சிறப்பித்தனர்.
உலக உதைபந்தாட்ட நாயகர்கள் மரடோனா, பெரிய றொனால்டோ உள்ளிட்ட பத்து வீரர்கள் பற்றிய நிறைந்த செய்திகளைக் கொண்ட இந்நூல் தமிழுக்கு தனிவரவே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here