இலங்கையின் வடக்குக் கிழக்கு பிறிமியர் லீக் உதைபந்தாட்டம்
காலத்தின் கனவுகைகூடுகிறது..
என்.ஈ.பி.எல் என்றுஅழைக்கப்படும் வடக்குக் கிழக்குமாகாணங்கள் இணைந்த பிறிமியர் லீக் உதைபந்தாட்டம் இலங்கையில் ஆரம்பிக்கிறது என்பதுஉலகம் முழதும் பரந்துவாழும் தமிழர்களுக்கும்,உதைபந்தாட்ட ரசிகர்களுக்கும் இனிப்பான செய்தியாகும்.
போரினால் பாதிக்கப்பட்டமக்கள் அதில் இருந்து மீண்டெழுந்து நடாத்தும் வாழ்க்கைப் போராட்டத்தின் இன்னொரு மைற்கல் இதுவாகும்.
இந்தஆண்டுமே,யூன்,யூலைமாதங்களில் சுமார் ஐம்பதுவரையானஆட்டங்கள் வடக்குக் கிழக்குமாகாணங்களில் நடைபெறவுள்ளன. சுமார் பன்னிரண்டுவரையானஅணிகள் இந்தபோட்டியில் பங்கேற்கின்றன.
உதைபந்தாட்டத்தில் முன்னேறிஅதை பலகோடிகள் புரளும் பெரும் தொழிலாக மாற்றிய உலகநாடுகள் அதனால் அடைந்த நன்மைகள் பல.
இதுவரை அது நமக்கு கனவு.. இப்போதோ நனவு..!!
பந்தடி சோறு தருமா..? என்பது நமது மக்களிடையே கேட்கப்படும் புரிதேய்ந்து போன ஒரு மிகப்பழைய கேள்வியாகும். படிக்கவேண்டும் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் நமது இலட்சியச் சோறுநமக்குக் கிடைக்கும் என்ற எண்ணம் இன்னமும் நம்மிடையே மாறவில்லை.
இந்தக் குரல்களுக்குரிய இயலாத மனிதர்கள் குற்றவாளிகள் இல்லை. உதைபந்தாட்டத்தை பிறிமியர் லீக் ஆட்டநிலைக்கு கொண்டுவந்து அதை வர்த்தக நிலைக்கு மாற்றத்தவறியதும்,அத்தகைய மாற்றத்தை வாழ்க்கை நீரோட்டத்தில் கலக்கத் தவறியதும் சமுதாயம் இழைத்ததவறாகவே பார்க்கப்பட வேண்டும்.
உருவாக்கியிருந்தால் சோறு போடுமா என்ற கேள்வி உருவாகியிருக்காதல்லவா…?
மற்றவர்களை குற்றம் சொல்லமுடியாது சமுதாயம் என்பது நாம்தான். நாமே அதை மேம்படுத்தும் பணிகளை முன்னின்று ஆரம்பிப்பதுதான் வெற்றிக்கான திறவுகோலாகும். இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பிறிமியர் லீக்கின் வரவானது,பழையகாலத்தைப் போலவரும் வரும் என்று காத்திராமல் துணிந்து முன்னெடுக்கப்பட்ட அரிய முயற்சியாகும்.
வடக்கு,கிழக்கு மாகாணங்களின் உதைபந்தாட்டமானது போருக்கு முன்னர் கணிசமான வளர்ச்சி பெற்று பலசிறந்த வீரர்களை உருவாக்கியிருந்ததை மறுக்க இயலாது.
அன்று அந்த ஆட்டங்கள் லீக் முறையை நெருங்கினாலும், அதை எட்டித்தொட முன்னரே போர் வெடித்துவிட்டது. சீன அணி வடக்குக் கிழக்கு வந்தபோது பிறிமியர் லீக் போன்ற ஓர் எத்தனம் எடுக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அது போதிய வளர்ச்சி பெறவில்லை.
போர் முடிவடைந்துசுமார் ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் முதற் தடவையாக பிறிமியர் லீக் ஆட்டம் இலங்கையின் வடக்குக் கிழக்கில் ஆரம்பிக்கிறது.
இதற்கான வளங்கள் நம்மிடம் இருக்கின்றனவா என்ற கேள்விக்கு தாராளமாக என்ற பதிலே இப்போது விடையாகக் கிடைத்துள்ளது.
இதுவரைகாலமும் ஊர்களின் அணிகளும், அந்தந்த ஊர்களில் உள்ள கழகங்களும் தத்தமது பிரதேசமட்டத்திலான ஆட்டங்களில் ஜொலித்து வந்தன. சுதந்திரத்திற்கு பின்னதான எழுபது வருடங்களில் வளர்க்கப்பட்ட, அதற்குமேல் வளர வழி தெரியாத பயிர்களாக அவை எதற்கோ ஏங்கிநின்றன.
ஆனாலும் பிறிமியர் லீக்கிற்கான சிறந்தவீரர்களை வழங்கக் கூடிய வங்கிபோல இன்று பல கழகங்கள் இருக்கின்றன. அவர்கள் தாமாக அடுத்தகட்டத்திற்குள் நுழைய இந்தஆரம்பம் தூண்டுகொலாக அமைந்துள்ளது.
விளையாட்டு தொழில்ரீதியாக மாறும் காலம் மலர்வதால் இளையோரிடையே ஒரு புதிய உதைபந்தாட்ட உற்சாகம் கரைபுரண்டோடப் போகிறது.
விளையாட்டு சோறுதருமா என்ற கேள்விக்கு, இப்போதுதான் ஆம் என்ற விடை கிடைக்கப்போகிறது. இன்று வளர்ந்த நாடுகளின் லீக் ஆட்டங்களில் ஆடும் உதைபந்தாட்ட வீரர்களே மிகப் பெரும் பணம் குவிக்கும் இயந்திரங்களாக இருக்கிறார்கள்.
போட்டிகளில் வழங்கப்படும் பரிசுத்தொகைகளும், வீரர்களுக்குவழங்கப்படும் விலையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் எகிறிவிடும். வெகுவிரைவில் வடக்குக் கிழக்கில் உதைபந்தாட்டம் பணம் தரும் பெரிய ஆட்டமாக மலர்ந்துவிடப் போவதுதெரிகிறது.
அது மட்டுமல்லாமல் இலங்கைத் தீவின் மற்றையபகுதிகளின் லீக் ஆட்டங்களுக்குவீரர்களைவழங்கும் சிறந்தவிளையாட்டுபிராந்தியமாகவும் வடக்குக் கிழக்குமாறும்.
எதிர்காலத்தில் ஆசிய, ஐரோப்பிய நாடுகளை நோக்கி நமதுவீரர்கள் நட்சத்திரவீரர்களாக பயணிப்பதற்கும் இந்த முயற்சி வழிகாட்டும் என்ற இலக்கில் சிந்திக்கவேண்டும்.
பிறிமியர் லீக் ஆட்டங்களை தனியேதொழில் முறை என்று மட்டும் பார்க்கமுடியாது, அது சமுதாயத்திலும் பலமாற்றங்களை ஏற்படுத்தும் என்பது ஐரோப்பியவரலாறு.
இதுவரைகாலமும் தமது பிரதேசங்களில் உள்ள அணிகளை வெல்வதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்ட கழகங்கள், தமதுவீரர்களை பிறிமியர் லீக் ஆட்டங்களுக்குஅமைவாகவளர்த்தெடுக்கமுயல்வதேஒருவளர்ச்சியல்லவா..?
இதனால் உதைபந்தாட்டம் ஒரு கல்வியாகவும், ஒழுக்கமாகவும் மாற்றமடையும். அது பாடசாலைவாழ்வு, சமுதாயவாழ்வில் ஒரு புதிய பரிமாணத்தை இளையதலைமுறையினரிடையே ஏற்படுத்தி, அவர்களுடைய ஆர்வத்தை நிபுணத்துவ விளையாட்டின் பால் திருப்பிவிடும்.
அகில இலங்கை அணிமுதல், தென்னமெரிக்கா வரைசிறந்த உதைபந்தாட்டவீரர்களுக்கு சந்தை இருக்கிறது. அந்தத் தேடலில் நமது இளைஞர் இறங்க இந்தப் போட்டிகள் வழிகாட்டும்.
நம்மிடையே ஒரு மரடோனாவும், ஒரு றொனால்டோவும், ஒரு மெஸியும் ஏன் மலரமுடியாது நிச்சயம் முடியும், அந்தநாள் தெரிகிறது.
பொதுவாகபிறிமியர் லீக் ஆட்டங்கள் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடந்தால் அதன் தராதரம் பெரியவளர்ச்சி கண்டுவிடும். அதன் பின்னர் உணவு, பழக்கம், தேகப்பயிற்சி, உதைபந்தாட்டக் கல்வி என்று வாழ்க்கை அடிதலையாக மாற்றமடையும். அது நாளாவட்டத்தில் சிறந்த சமுதாய உருவாக்கத்திற்கான விளைநிலமாகவும் உருவெடுக்கும்.
பிறிமியர் லீக் ஆட்டங்கள் உள்ளநாடுகளில் இளையோர் குற்றச் செயல்களின் அளவு குறைவாகவும், சமுதாய ஒழுக்கம் சர்வதேசதரத்தை நோக்கிய வளர்ச்சியாகவும் இருக்கும்.
பல்கலைக்கழக படிப்பல்ல உதைபந்தாட்டமே சிறந்தகல்வி என்பதை சமுதாயம் கண்டுபிடிக்கும் திருநாளும் வரும்.
இப்படி நம்பமுடியாத பல மாற்றங்கள் ஏற்படும்.
சேரிப்பகுதியில் பிறந்த அல்பேனிய பின்னணி கொண்ட பிரான்சியவீரன் ஸிடன் உலகத்தின் சிறந்த உதைபந்தாட்ட வீரனாக தேர்வானதும், உலகப் பெரும் பணக்காரன் ஆனதும் லீக் ஆட்டங்களால்தான்.
போத்துக்கேய கிறிஸ்டியானோ றொனால்டோ உலகப் புகழ் பெற்றது லீக் ஆட்டங்களில் இருந்துதானே..
இன்று ஆர்ஜண்டீனாவில் மரடோனாவுக்குகோயில் கட்டிவழிபாடுகிறார்கள் எதற்காகஉதைபந்தாட்டவீரன் என்பதாலேயே..
கி.பி-கி.மு என்று இயேசுநாதரை வைத்துகாலம் கணிப்பிடப்பட்டதைப் போல மரடோனாவுக்கு முன் பின் என்று ஆர்ஜண்டீனாவில் ஒருகாலக்கணக்கு கடைப்பிடிக்கப்படுகிறதே ஏன்.. லீக் ஆட்டங்களால் வந்த உயர்வே.
கல்விபோல விளையாட்டையும் கற்று, உதைபந்தாட்ட பாடசாலைகள் சென்று விளையாட்டை வாழ்வாக்கும் புதியகாலத்தை உருவாக்க லீக் ஆட்டங்கள் உதவும்.
பொருளாதாரம் விளையாட்டையும், அதுபோல விளையாட்டு பொருளாதாரத்தையும், இவை இரண்டும் சமுதாயத்தையும் மாறிமாறி உந்தித்தள்ளி சமுதாயத்தை மேல் நோக்கிச் உயர்த்திச் செல்லும்.
மேலும் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு வளரவும் இதுபோன்ற லீக் ஆட்டங்கள் உதவும். தெற்கில் இருந்து சிறந்த விளையாட்டுவீரர்கள் இறக்குமதியாகும் போது விளையாட்டு வர்த்தகமாகமாறும்.
ஆட்டங்களுக்கான லொத்தர், பந்தயங்கள் போன்றன உருவாகும், மத்தியஸ்த்தர், பயிற்சியாளர், மைதானம், சத்துணவு என்று பல கிளைத் தொழில்கள் மலரும்.
இப்படிபிறிமியர் லீக் ஆட்டத்தின் சிறப்புக்களை அடுக்கிக் கொண்டேபோகலாம்…
ஆனால் ஒருநாட்டில் பிறிமியர் லீக் ஆட்டம் ஆரம்பித்துவிட்டால் அதில் எல்லோராலும் இடம் பெற இயலாத நிலைவரும். ஆகவே தரமான வீரர்களை உருவாக்குவது எப்படியென்ற நோக்கில் கழகங்கள் தம்மை மாற்ற வேண்டிய தவிர்க்க முடியாத நிலையும் வரும்.
பொறுமை, சகிப்புத்தன்மை, வெற்றி தோல்விகளை ஏற்கும் பண்பு, எழுத்துமறையான சட்ட ஒப்பந்தங்களுக்குள் விளையாட்டு நகர்த்தப்படுதல் போன்றபலமாற்றங்கள் வரும்.
சுhதாரண சமுதாயம் வேறு.. பிறிமியர் லீக் சமுதாயம் வேறு.
வடக்குக் கிழக்கு ஒருபிறிமியர் லீக் சமுதாயமாக மாறுவது போருக்கு பிந்திய வரலாற்றில் ஒருமைல் கல் ஆகும்.
ரஸ்யாவில் உலகக் கிண்ண உதைபந்தாட்டம் ஆரம்பமாகும் தருணத்தில் ஆரம்பிக்கும் பிறிமியர் லீக் உதைபந்தாட்டம் வடக்குக் கிழக்கின் வைகறையில் ஒருபுதிய சூரியனைஎழுப்பப் போகிறது என்பதைஎண்ணினால் மகிழ்ச்சிக்குகுறைவேது.
சமுதாயத்தை மலர்விக்கும் இதுபோன்ற பணிகளுக்கு வளர்ந்தபின் ஆதரவு கொடுப்பதைவிட இப்போது ஆதரவு கொடுப்பதே சிறந்த புத்திசாலித்தனமாகும்.
கி.செ.துரை ( டென்மார்க் )









