வவுனியாவில் மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு இருபது வருட கடூழிய சிறை!
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த 39 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
வவுனியா நெடுங்கேணியில் பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்த மாணவி 2014ம் ஆண்டளவில் சாதாரண தர பரீட்சைக்காக தனக்கு அறிமகமான ஆசிரியர் ஒருவரிடம் கணித பாட வினாத்தாள்களை வாங்கித்தர முடியுமா என கேட்டுள்ளார்
அதற்கு குறித்த ஆசிரியர் வாங்கித் தருவதாக இரண்டு தடவை ஏமாற்றியுள்ளார். மூன்றாவது தடவையும் குறித்த சிறுமி ஆசிரியரின் வீட்டுக்கு சென்று வினாத்தாள்களை கேட்ட போது வாங்கி வரவில்லை என கூறியதோடு தனது காணியில் வேலை செய்பவர்களுக்கு தேனீர் ஊற்றிக் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
சிறுமியும் தேனீர் ஊற்றுவதற்காக வீட்டிற்குள் சென்ற சந்தர்ப்பத்தில் எதிரியாக இனங்காணப்பட்ட ஆசிரியர் குறித்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த எதிரியை கைது செய்து வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.
இதன் பிரகாரம் கடந்த 2017ம் ஆண்டு 07ம் மாதம் 18ம் திகதியன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கின் விளக்கம் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டு 04.04.2018 ம் திகதி தீர்ப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்தது.
வழக்கினை விளங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி எதிரியை குற்றவாளியாக கண்டதுடன் இருபது வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் அபராதமாக ஒரு இலட்சம் ரூபாவும், அதனை செலுத்த தவறின் ஆறு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஸ்டஈட்டு பணமாக ரூபா ஐந்து இலட்சம் செலுத்தப்பட வேண்டும் எனவும் குறித்த நஸ்ட ஈட்டு பணத்தை செலுத்த தவறின் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
அத்துடன் நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பிலே தொடர்ந்தும் இந் நீதிமன்றம் இவ்வகையான குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி தீர்ப்பளிக்கின்ற போதிலும் சமூகத்தில் இவ்வகையான குற்றச்செயல்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும் சமூகத்தில் கௌரவமான புனிதமான தொழில்களில் இருந்து கொண்டு இவ்வகையான குற்றச்செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள்இ ஈடுபட நினைப்பவர்களிற்கும் இத்தீர்ப்பின் மூலம் எச்சரிக்கை விடுப்பதாகவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கு தொடுனர் தரப்பில் வழக்கை அரச சட்டவாதி ஐ.எம்.எம் பாகிம் நெறிப்படுத்தியிருந்தார்.