அயர்லாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ஆம்லா பிளசி சதம் அடித்து கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில், 11வது ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் நடக்கிறது. கான்பெரோவில் இன்று நடக்கும் ‘பி’ பிரிவு லீக் போட்டியில், தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டிவிலியர்ஸ் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் (1) ஏமாற்றினார். இதன் பின் இணைந்த ஆம்லா, பிளசி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சொர்னாசன் வீசிய 24வது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ஆம்லா சதத்தை எட்டினார். தன் பங்கிற்கு டுபிளசி (109) சதம் அடித்தார். ஆம்லா 159 ரன்களில் ஆட்டமிழந்தார். டிவிலியர்ஸ் 24 ரன்கள் மட்டும் எடுத்தார். ரோசோவ் அரை சதம் விளாசினார். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்தது. மில்லர் (46), ரோசோவ் (61) அவுட்டாகாமல் இருந்தனர்.
கடின இலக்கை விரட்டிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் போர்டர்பீல்டு (12) ஏமாற்றினார். ஸ்டைன் ‘வேகத்தில்’ ஸ்டெர்லிங் (9), ஜாய்ஸ் (0) அவுட்டாகினர். அபாட் பந்துவீச்சில் நெயில் ஓ பிரையன் (14), வில்சன் (0) ஆட்டமிழந்தனர். பால்பிர்னே அரை (58) சதம் அடித்தார். கெவின் ஓ பிரையன் 48 ரன்கள் எடுத்தார். பின் வந்தவர்கள் அடுத்தடுத்து வெளியேற, அயர்லாந்து அணி 45 ஓவரில் 210 ரன்களுக்கு ஆல்– அவுட்டாகி தோல்வியடைந்தது. மெக்பிரைன் (2) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக அபாட் 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக சதம் அடித்து அசத்திய ஆம்லா தெரிவு செய்யப்பட்டார்.