இங்கிலாந்தை நொறுக்கி எடுத்தது இலங்கை, 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது..

0
140 views

உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபாரவெற்றி பெற்றது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து–இலங்கை (ஏ பிரிவு) அணிகள் மோதின. இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி.தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 111 ரன்கள் வித்தியாசத்தில்.ஆஸ்திரேலியாவிடமும், 2– வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடமும் மோசமான தோல்வியை சந்தித்தது. 3– வது ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்தை 119 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இலங்கை அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 98 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்தது. அடுத்த ஆட்டங்களில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், 92 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் விரட்டியது.

இங்கிலாந்து அணியின் ஆட்டம் இந்த போட்டி தொடரில் இதுவரை மெச்சும் வகையில் அமையவில்லை. இலங்கை அணி முதல் ஆட்டத்தில் சரிவை சந்தித்தாலும், தனது கடைசி 2 லீக் ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து ஓரளவு விளையாடினாலும், இலங்கையின் பேட்டிங் முன் எடுபடவில்லை.
போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து விளையாடியது.
இங்கிலாந்து அணியில் ரூட் தனது அதிரடி ஆட்டம் மூலம் அணிக்கு ரன் சேர்த்தார். இங்கிலாந்து அணியில் மொயின் அலி 15 ரன்களிலும், பெல் 49 ரன்களிலும், பால்லன்ஸ் 6 ரன்களிலும், மொர்கன் 27 ரன்களிலும், டெய்லர் 35 ரன்களிலும், ரூட் 121 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.

இங்கிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 309 ரன்கள் எடுத்து இலங்கை அணிக்கு 310 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இதனையடுத்து இலங்கை பேட்டிங் செய்து விளையாடியது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இங்கிலாந்தின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர். இங்கிலாந்தின் பந்துவீச்சு எடுபடவில்லை. இலங்கை அணியில் சங்கரகரா, திரிமன்னே அதிரடியாக ஆடினர். இருவரும் இங்கிலாந்தின் பந்துவீச்சை பதம்பார்த்தனர். இருவரும் சதம் அடித்தனர். இலங்கை அணி 47.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் இலக்கை தகர்த்தது. திரிமன்னே 139 (13 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) ரன்களையும் சங்கரகரா 117 (11 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) ரன்களையும் எடுத்தனர். ரூட்டின் அதிரடி பலனளிக்காமல் செய்துவிட்டனர். இங்கிலாந்து அணிக்கு இது மூன்றாவது தோல்வியாகும். ஆட்ட நாயகனாக அதிரடிச் சதம் அடி்த்த இலங்கையின் சங்கா தெரிவுசெய்யபபட்டார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here