ஐ.பி.எல் பைனலில் பவுலிங், பேட்டிங்கில் சொதப்பிய சென்னை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் சாம்பியன் பட்டம் வெல்லும் கனவு தகர்ந்தது. அபாரமாக ஆடிய மும்பை அணி இரண்டாவது முறையாக கோப்பை வென்று அசத்தியது. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த 8வது ஐ.பி.எல் தொடரின் பைனலில் சென்னைஇ மும்பை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனிஇ ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
மும்பை அணியின் பார்த்திவ் படேல் (0) ‘ரன்-அவுட்டாகி’ ஏமாற்றினார். பின் லெண்டில் சிம்மன்ஸ். ரோகித் சர்மா சேர்ந்து சென்னை பந்துவீச்சை ஒருகை பார்த்தனர். இவர்கள், பவுண்டரி, சிக்சர்களாக விளாச, ஸ்கோர் ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்தது. ஜடேஜா வீசிய 6வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த சிம்மன்ஸ், அரைசதத்தை பதிவு செய்தார். கேப்டனுக்கு உரிய முறையில் ஆடிய ரோகித், 25 பந்தில் அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்த போது ரோகித் (50) அவுட்டானார். ஸ்மித் பந்தில் சிம்மன்ஸ் (68) போல்டானார்.
இதற்கு பின் போலார்டு தன்பங்கிற்கு வாணவேடிக்கை காட்ட, சென்னை ரசிகர்கள் நொந்து போயினர். இவர், நெஹ்ரா வீசிய 17வது ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த அம்பதி ராயுடு, ஸ்மித், பிராவோ, மோகித் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த போது போலார்டு (36) வெளியேறினார். பாண்ட்யா (0) நிலைக்கவில்லை. பிராவோ வீசிய கடைசி ஓவரில் ஹர்பஜன் ஒரு சிக்சர் அடிக்க, மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. அம்பதி ராயுடு (36), ஹர்பஜன் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
இமாலய இலக்கை விரட்டிய சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் ஆடினர். மைக்கேல் ஹசி (4) ஏமாற்றினார். பின் டுவைன் ஸ்மித், ரெய்னா நிதானமாக ரன் சேர்க்க, 10 ஓவரில் 67 ரன்கள் தான் கிடைத்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்த போது ஹர்பஜன் ‘சுழலில்’ ஸ்மித் (57) சிக்கினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ரெய்னா (28), ஹர்பஜனிடம் சரணடைந்தார். டுவைன் பிராவோ (9) நிலைக்கவில்லை. மலிங்கா ‘வேகத்தில்’ கேப்டன் தோனி (18) போல்டாக, சென்னை தோல்வி உறுதியானது டுபிளசி (1), அஷ்வின் (2) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 161 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 2வது இடம் பெற்று ஆறுதல் தேடியது. ஜடேஜா (11), மோகித் சர்மா (21) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை அணி சார்பில் மெக்லீனகன் 3, ஹர்பஜன், மலிங்கா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பிராவோ: 25
ரோகித் சர்மாவை அவுட்டாக்கிய சென்னை அணியின் டுவைன் பிராவோ, இம்முறை 25 விக்கெட் கைப்பற்றிய முதல் பவுலர் என்ற பெருமை பெற்றார். இவர், 17 போட்டியில் 26 விக்கெட் வீழ்த்தினார். கடந்த 2013ல் நடந்த தொடரில் 32 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஐ.பி.எல் அரங்கில் 2வது முறையாக ஒரு தொடரில் 25 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என்ற பெருமை பெற்றார்.
மும்பை: 202
அபாரமாக ஆடிய மும்பை அணி 202 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஐ.பி.எல் பைனலில் முதலில் ‘பேட்டிங்’ செய்து அதிக ரன்கள் குவித்த அணிகளுக்கான பட்டியலில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில் சென்னை அணி (205 ரன், எதிர்-பெங்களூரு, 2011) உள்ளது.
இரண்டாவது முறை
நேற்றைய பைனலில் அசத்திய மும்பை அணி, இரண்டாவது முறையாக (2013, 2015) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் ஐ.பி.எல் அரங்கில் அதிகமுறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் சென்னை (2010, 2011)இ கோல்கட்டா (2012, 2014) அணிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டது. மூன்று அணிகளும் தலா 2 முறை கோப்பை வென்றன. ராஜஸ்தான் (2008), டெக்கான் (2009) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
வார்னர் ‘டாப்’
இம்முறை அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான பட்டியலில் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலிடம் பிடித்தார். இவர்இ 14 போட்டியில் 7 அரைசதம் உட்பட 562 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இவர் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான ‘ஆரஞ்சு’ நிற தொப்பியை பெற்றார். அடுத்த நான்கு இடங்களில் ராஜஸ்தானின் ரகானே (540 ரன்), மும்பையின் சிம்மன்ஸ் (540), பெங்களூருவின் டிவிலியர்ஸ் (513), விராத் கோஹ்லி (505) உள்ளனர். சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக பிரண்டன் மெக்கலம் 436 ரன்கள் எடுத்தார்.
பிராவோ மிரட்டல்
அதிக விக்கெட் கைப்பற்றியவர்களுக்கான வரிசையில் சென்னை அணியின் டுவைன் பிராவோ முதலிடம் பிடித்தார். இவர், 17 போட்டியில் 26 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இவர், அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கான ‘பர்பிள்’ நிற தொப்பியை கைப்பற்றினார். அடுத்த நான்கு இடங்களில் மும்பையின் மலிங்கா (24), பெங்களூருவின் சாகல் (23), சென்னையின் நெஹ்ரா (22), பெங்களூருவின் ஸ்டார்க் (20) ஆகியோர் உள்ளனர்.
ரூ. 15 கோடி பரிசு
இம்முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ. 15 கோடி பரிசு வழங்கப்பட்டது. பைனல் வரை முன்னேறி 2வது இடம் பிடித்த சென்னை அணிக்கு ரூ. 10 கோடி வழங்கப்பட்டது.
நான்காவது முறை
ஐ.பி.எல் அரங்கில் 6 முறை பைனலுக்கு முன்னேறிய பெருமை பெற்ற சென்னை அணி 2 முறை (2010, 2011) மட்டுமே கோப்பை வென்றது. நான்கு முறை (2008, 2012, 2013, 2015) பைனலில் தோல்வி அடைந்தது. இதில் இரண்டு முறை (2013, 2015) மும்பைக்கு எதிராகவும், தலா ஒரு முறை ராஜஸ்தான் (2008), கோல்கட்டா (2012) அணிகளிடம் பைனலில் வீழ்ந்தது.
692
இம்முறை மொத்தம் 692 சிக்சர் அடிக்கப்பட்டன. அதிகபட்சமாக பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் 38 சிக்சர் விளாசினார். மும்பையின் போலார்டு (28 சிக்சர்), பெங்களூருவின் கோஹ்லி (23), சென்னையின் மெக்கலம் (23), பெங்களூருவின் டிவிலியர்ஸ் (22) ஆகியோர் அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் ‘டாப்-5’ வரிசையில் உள்ளனர்.
இம்முறை….
#. எட்டாவது ஐ.பி.எல் தொடரில் 4 சதம், 89 அரைசதம் உட்பட 18, 332 ரன்கள் எடுக்கப்பட்டன. பவுண்டரி, சிக்சர் மூலம் 10, 580 ரன்கள் கிடைத்தன.
#. ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் பெங்களூருவின் டிவிலியர்ஸ் (133 ரன்இ எதிர்-மும்பை) முதலிடம் பிடித்தார். கெய்ல், வாட்சன், மெக்கலம் ஆகியோர் தலா ஒரு சதம் அடித்தனர்.
#. ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த அணிகளுக்கான வரிசையில் பெங்களூரு அணி (235 ரன், எதிர்-மும்பை) முதலிடம் பிடித்தது.
#. அதிக அரைசதம் அடித்தவர்களுக்கான பட்டியலில் ஐதராபாத்தின் வார்னர் (7 அரைசதம்) முதலிடம் பிடித்தார்.
#. அதிக முறை ‘டக்-அவுட்டான’ வீரர்கள் வரிசையில் சென்னையின் ஸ்மித் (3) முதலிடம் பிடித்தார்.
#. மொத்தம் 686 விக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதில் அதிகபட்சமாக சென்னையின் பிராவோ 26 விக்கெட் வீழ்த்தினார். சிறந்த பந்துவீச்சை சென்னையின் நெஹ்ரா (4 விக்கெட், 10 ரன்கள் எதிர்-பெங்களூரு) பதிவு செய்தார். இம்முறை ஒரு ‘ஹாட்ரிக்’ விக்கெட் கூட பதிவாகவில்லை.
சாதிக்கும் ‘2’
ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடிப்பது ராசியானது. 2011(சென்னை), 2012(கோல்கட்டா), 2013(மும்பை), 2014(கோல்கட்டா), 2015(மும்பை) என தொடர்ந்து 5 முறை புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பெற்ற அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றன.
தொடரும் ரோகித் ராசி
கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானம் மும்பை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ராசியானது. இங்கு தனது முதல் டெஸ்ட் சதம் அடித்தார். ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்(264 ரன், எதிர் இலங்கை, 2014) எடுத்து உலக சாதனை படைத்தார். 2013ல் ஐ.பி.எல் கோப்பை வென்றார். நேற்று மீண்டும் ஐ.பி.எல் கோப்பையை வசப்படுத்தினார்.












