தமிழ் நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வசிக்கும் வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகக் கொண்ட மோகன்ராஜ் டினேஸ்கரன் (வயது 12) என்பவர் சென்னை,மதுரை,கோயம்புத்தூர்,தஞ்சாவூர்,பரமக்குடி என தமிழ் நாட்டின் எல்லா நகரங்களிலும் நடக்கும் கராத்தே போட்டிகளில் கலந்து தனது திறமையால் பல வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கின்றார்.
மண்டபம் முகாம் அரசு மேல் நிலைப் பள்ளியில் ஏழாம் ஆண்டில் கல்வி பயிலும், செல்வன் டினேஸ்கரன் கடந்த 06ஃ09ஃ2015 அன்று தஞ்சாவூரில் நடந்த தமிழ்நாடு ஓபன் கராத்தே போட்டியில் காட்டா வில் முதலாம் இடமும்,
குழு காட்டாவில் இரண்டாம், மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் கோவையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதற்கு இராமநாதபுரம் போலீஸ் உயர் அதிகாரி திரு.மயில்வாகனம் அவர்களின் பாராட்டும் இவருக்கு கிடைத்துள்ளது.
அத்தோடு ஜப்பானில் இருந்து வந்த கிரான்ட் மாஸ்டர் Shihan Kancho Noboru Takahasi அவர்களிடம் நேரடியாக பயிற்சி பெறும் வாய்ப்பும் கிடைத்திருக்கின்றது.
இவர் வல்வெட்டித்துறை ரஞ்சனா சினிமா தியேட்டரில் பணியாற்றிய திரு.ந. மாயழகு என்பவரின் பேரன் ஆவார்.
குழந்தைப் பருவத்திலேயே தனது தந்தை மோகன்ராஜ் இடம் இருந்து கராத்தே கலையைப் பயின்று படிப்படியாக முன்னேறி பன்னிரண்டு வயதிலேயே மாநில அளவில் முதல் இடம் பெற்ற டினேஸ்கரன் மேலும் மேலும் பல வெற்றிகளைக் குவித்து வல்வெட்டித்துறைக்கு பெருமை சேர்க்க நாமும் வாழ்த்துவோம்……



















