இலங்கையில் பொருளாதார அவசரநிலை அமுல்

0
485 views

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை ,கடந்த சில காலமாகவே வெகுவாக அதிகரித்து வருகின்ற பின்னணியில், அவசரகால விதிமுறைகளை அறிவித்துள்ளது அரசு.

 

 

 

 

 

 

 

 

 

சீனி, பால்மா, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ச்சியாகவே தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ளன.
இவ்வாறான நிலையில், அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகளை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, செட்பம்பர் 31 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அவசரகால விதிமுறைகளுக்கான வர்த்தமானி அறிவிப்பு செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தரவிற்கு அமைய, இந்த அவசரகால விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல், அதிக விலை அறவிடுவதன் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அல்லது சுங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகக் கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலைக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும், அரச வங்கிகளின் மூலம் மொத்தமாகக் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கடன், கடன் பெற்றுக்கொண்டவர்களிடம் இருந்து அறவிடப்படக்கூடிய வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

கடந்த சில தினங்களில் மாத்திரம் சுமார் 10,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே, ஜனாதிபதியினால் இந்த அவசர கால விதிமுறை சட்டம் அமல்படுத்தப்பட்டது.

எதிர்கட்சிகள் அழுத்தம் கொடுக்கும் அதே வேளை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால் மாத்திரமே, இந்த சட்டத்தை பயன்படுத்த முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

இந்த சட்டம் அறிவிக்கப்பட்டதன் ஊடாக, நாட்டில் இனி முழுமையாக ஜனாதிபதியின் ஆட்சியே நிலவும் என்பதே, இதிலுள்ள அபாயம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதி, தான் விரும்பிய அவசரகால விதிமுறை சட்டங்களை வகுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அவசரகால நிலைமை அறிவிப்பின் ஊடாக, சட்டங்களை ஜனாதிபதி நிறைவேற்றும் அதிகாரமும் கிடைக்கும் என அவர் கூறுகின்றார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here