20 வருட ஆப்கானிஸ்தான் முற்றுகையை முடித்துக் கொண்டு அமெரிக்காவின் கடைசி ராணுவ விமானம் இன்று புறப்பட்ட பிறகு காபூல் விமான நிலைய பாதுகாப்பை தாலிபன் ஆயுதக்குழு தமது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
எங்கள் நாடு முழு சுதந்திரம் அடைந்துவிட்டது” என்று கொண்டாடி வருகிறார்கள் தாலிபன்கள் –
தாலிபன் செய்தித்தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் பேசும்போது, “உங்களுடைய தியாகங்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். நீங்களும் உங்களுடைய தலைமைகளும் அனுபவித்த கடுமையான இன்னல்களாலேயே இதை சாதிக்க முடிந்திருக்கிறது. நமது நேர்மை மற்றும் பொறுமையால்தான் இந்த நாடு இன்று அன்னிய சக்திகளிடம் இருந்து விடுபட்டுள்ளது,” என்றார்.
அபாயகரமான சூழ்நிலையில் வெளியேறிய படை வீரர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படையினர்களில் சுமார் 2,500 பேர் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.
ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் சுமார் ஒரு லட்சத்து 23 ஆயிரம் பொதுமக்களை அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் போர் முடிந்துவிட்டது. ஆனால் ஆப்கன் மக்களின் போர் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.











