தக்க பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா: பரபரப்பான ஆட்டத்தில் திரில் வெற்றி பெற்றது நியூசிலாந்து…

0
398 views


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி திரில் வெற்றியை ருசித்தது. உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் நடைபெறும் 20-வது லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நாடுகளான ஆஸ்திரேலியா- நியூசிலாந்து (ஏ பிரிவு) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவாதால் இந்த போட்டி கடும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. இதன் படி முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் பிஞ்சும் வார்னரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார். அசுர பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையை தங்கள் துல்லியமான பந்துவீச்சால் நீயூசிலாந்து பந்து வீச்சாளர்கள் ஆட்டம் காண வைத்தனர். இதனால் பின்ச் (17), வார்னர் (34), வாட்சன் (23), கிளார்க் (12), ஸ்மித் (4), மேக்ஸ்வெல்(1), மார்ஸ்(0), ஜான்சன் (1), ஸ்டார்க்(0), என அடுத்தடுத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பெவிலியனுக்கு திரும்பினர். ஒரு வீரர் கூட நிலைத்து நின்று ஆடாததால் ஆஸ்திரேலிய 106 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கடைசி விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஸ்டார்க்குடன் ஹேடீன் ஜோடி சேர்ந்து சற்று அதிரடியாக ஆடினார். இதனால் அந்த அணி 150 ரன்களை கடந்தது. ஹேடீன் 43 ரன்களில் இருந்த போது ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் அந்த அணி 32.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் பவுல்ட் 5 விக்கெட்டுகளையும், சவுதி மற்றும் விட்டோரி தலா 2 விக்கெட்டுகளையும் ஆண்டர்சன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதைதொடர்ந்து நியூசிலாந்து அணி 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியுசிலாந்து அணி தொடக்கத்தில் அதிரடி காட்டியது. குறிப்பாக மெக்கல்லம் ஆஸ்திரேலிய பந்து வீச்சை துவம்சம் செய்தார். இருப்பினும் மறுமுனையில் இருந்த குப்தில் 11 ரன்களில்ல் வெளியேற 3வது விக்கெட்டுக்கு களம் கண்ட வில்லியம்சன் மெக்கல்லத்துடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணையின் அதிரடியால் எளிதில் வெற்றியை ருசித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 24 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 50 ரன்களை குவித்த மெக்கல்லம் கம்மின்ஸ் பந்தில் வெளியேறினார். மெக்கல்லம் அவுட் ஆன பிறகு நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் சீட்டுகட்டுகள் போல் சரிந்தது.

ஒரு புறம் வில்லியம்சன் நிலைத்து நிற்க அவருக்கும் யாருமே கம்பெனி கொடுக்காமல் மறுமுனையில் உள்ள வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் 146 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி திணறியதால் ஆட்டம் யார்பக்கம் செல்லும் என்று கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக களத்தில் உச்ச கட்ட பரபரப்பு நிலவியது. இருப்பினும் வில்லியம்சன் நங்கூரம் போல் நிலைத்து நின்று அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். 23.1 ஒவரில் வெற்றிக்கு தேவையான 152 ரன்களை நியூசிலாந்து அணி எடுத்தது. இதன் மூலம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது வில்லியம்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணி சார்பாக 05 இலக்குகளை கைப்பற்றிய பவுல்ட் தெரிவானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here