வல்வை உதயசூரியன் கழகத்தின் 57வது ஆண்டு விழா ஓர் பார்வை

0
1,138 views

உதயசூரியன் கழகத்தின் 57வது ஆண்டு விழாவானது, 31.08.2019 அன்றைய தினம், மாலை 2.30 மணியளவில் எமது உல்லாசக் கடற்கரையில், கப்பலுடையவரின் ஆசியுடன் ஆரம்பமாகியது.

எமது கழகத்தின் தலைவர் திரு.மு.ஜெயதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக திரு.அ.வசந்தன் (யாழ் மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர், வல்வை விளையாட்டுக் கழக உதைபந்தாட்ட பயிற்சியாளர்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.M.K.சிவாஜிலிங்கம் (முன்னால் பாராளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்) அவர்களும், கலந்து சிறப்பித்திருந்தனர்.

கப்பலுடையவரில் தேங்காய் உடைத்து தாயக உதயசூரியன் தலைவர் தொடங்கி வைக்க, இலண்டன் உதயசூரியன் கழக தலைவர் திரு.க.ரஞ்சித்குமார் அவர்கள் கற்பூரம் ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் நடைபெற்றது. மங்கள விளக்கினை எமது விருந்தினர்கள், இலண்டன் உதயசூரியன் கழக தலைவர், வல்வை விளையாட்டுக் கழக தலைவர் மற்றும் எமது தாயக உதயசூரியன் கழக உறுப்பினர்கள் ஏற்றிவைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கொடியேற்றல் வைபவம் நடைபெற்றது. தேசியக் கொடியினை பிரதம விருந்தினர் ஏற்றிவைக்க, சம நேரத்தில் தாய்க் கழகமாகிய வல்வை விளையாட்டுக் கழகத்தின் கொடியினை அதன் தலைவர் திரு.பிரதீபன், எமது உதயசூரியன் கழக கொடியினை எமது கழக தலைவர் திரு.மு.ஜெயதரன் ஆகியோர் ஏற்றி வைத்தனர். பின்னர் இல்லங்களுக்கான கொடியினை இல்லத் தலைவர்கள் ஏற்றி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றும் வைபவம் நடைபெற்றது. ஒலிம்பிக் தீபத்தினை இல்லத் தலைவர்களுடன், விளையாட்டு வீரர்கள் சார்பாக எமது வளர்ந்து வரும் வீரன் செல்வன் நவீன் அவர்கள் ஏற்றியதுடன், ஒற்றுமையாக, விளையாட்டு விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு செயற்படுவோம் என உறுதிமொழி எடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து எமது கழக வீராங்கனைகளின் அணிநடை மரியாதை நடைபெற்றது. அதனை எமது விருந்தினர்கள் மற்றும் எமது கழக தலைவர் ஆகியோர் ஏற்றுக்கொண்டிருந்தனர். பின்னர் எமது கழக வீர, வீராங்கனைகளுக்கான இறுதி நாள் விளையாட்டுகள் ஆரம்பமாகின.

பின்னர் எமது கழக சிறார்களின் இசைவும் அசைவும் நிகழ்வு நடைபெற்றது. மிகச் சிறப்பாக நடைபெற்ற அந்த நிகழ்வு அங்கே கூடியிருந்த பல பார்வையாளர்களின் பாராட்டினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து எமது உதயசூரியன் கழகத்தின் 57வது ஆண்டு நிறைவினை கொண்டாடும் முகமாக, ஐதரசன் வாயு நிரப்பப் பட்ட 57 பலூன்கள் எமது கழகத்தின் வர்ணங்களான செம்மஞ்சள் மற்றும் வெள்ளை வர்ணங்களில் சம நேரத்தில் எமது கழக சிறார்கள், எமது கழக வீரர்கள், எமது கழக மூத்த வீரர்கள் மற்றும் விருந்தினர்களும் இணைந்து வானில் ஏவியிருந்தனர்.

பின்னர் எமது கழக வீர, வீராங்கனைகளுக்கான இறுதி நாள் விளையாட்டுக்களுடன், வெற்றி பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள், பரிசில்களுடன் ஒவ்வொரு பயன்தரு மரங்களும் வழங்கப்பட்டன. இவற்றினை எமது விருந்தினர்கள், எமது கழக மூத்த உறுப்பினர்கள், எமது சகோதர கழக உறுப்பினர்கள் வழங்கி வைத்தனர்.

இவ் நிகழ்வுகள் நடைபெற்ற சம நேரத்தில் பார்வையாளர்களுக்கான நிகழ்வுகளும் மைதானத்தில் நடைபெற்றன. அவை கிரிஸ் கம்பம் ஏறுதல், தலையனைச் சண்டை, 15 வயதுக்குற்பட்ட சிறார்களுக்கான விளையாட்டு, கழகங்களுக்கிடையிலான கயிறுளுத்தல், தம்பதியர் நிகழ்ச்சி, நடுவர்களுக்கான நிகழ்ச்சி, பெண்களுக்கான நிகழ்ச்சி, முட்டி உடைத்தல் என பலதரப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

கயிறுளுத்தல் போட்டியில் எமது கழகம் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  நீண்ட காலமாக நாங்கள் தான் இதன் வெற்றியாளர்களாக வலம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் எமது கழக வீராங்கனைகளின் கண்காட்சி உடற்பயிற்சி நிகழ்ச்சியும் நடைபெற்றது. மிக சிறப்பாக நடைபெற்ற இவ்நிகழ்வானது கூடியிருந்த பார்வையாளர்களின் பலத்த வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

எம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இந்த சற்றுச் சூழலினை இப்புவியில் வாழும் அனைத்து உயிரினங்களும் காப்பாற்ற வேண்டியது கட்டாய கடமையானதாகும். அதனை ஞாபகப்படுத்தும் முகமாக விருந்தினர்கள், கழக வீர, வீராங்கனைகளுடன், எமது சகோதரக் கழகங்களுக்கு, ” பசுமைப் புரட்சி” திட்டத்தின் கீழ் பயன் தரும் மரங்கள் வழங்கப்பட்டது அத்துடன் வல்வை வரலாற்றிலேயே இவ்வாறனொரு பாரிய “பசுமைப் புரட்சி” திட்டத்தினை செயற்படுத்தியவர்கள் நாம் தான் என்பதில் பெருமை கொள்வோமாக.

இந்தியாவில் இருந்து வருகை தந்த Zee தமிழ் புகழ் சஹானா வின் சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இவர் விழிப்புலன் அற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பாடல்களை அவர் பார்வையாளர்களுக்காக பாடியிருந்தார். கீபோட் கருவி வாசித்தவாறு அவர் “கடவுள் தந்த அழகிய வாழ்வு” எனும் பாடலினை பாடிய போது, அரங்கமே நிசப்தமானது. அந்த பாடலானது அவரின் குரலில் எம் செவிகளுக்குள் சென்ற போது ஏதோ எம் மனதில் ஓரத்தில் ஓர் குறிப்பிட முடியாத உணர்ச்சி ஏற்பட்டது மறுக்க முடியாதது. அவருக்கு எமது உதயசூரியன் கழகத்தினர் பொன்னாடை அணிவித்து கௌரவித்ததுடன், சிறு பணப்பரிசிலும் அளித்திருந்ததனர். வேறு ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்ற செல்லவிருந்த காரணத்தினால், நேரடியாக அவரின் குரலில் மேலும் பாடல்களை கேட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இறுதியாக பரிசளிப்பு வைபவம் நடைபெற்றது. வாழ்த்துரையினை திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்கள் வழங்க, பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகளை திரு.சிவஞானம், திரு.திருக்குமரன் மற்றும் செல்வன் விதுசன் ஆகியோர் சிறப்பாக தொடுத்து வழங்கியிருந்தனர்.

பின்னர் கடந்த வாரம் நடைபெற்ற வெளிக்கழகங்களுக்கான நிகழ்வுகளுக்கான பரிசில்கள், இறுதிநாள் நிகழ்வுகளில் நடைபெற்ற பார்வையாளர் நிகழ்வுகளுக்கான பரிசில்களுடன், பசுமைப் புரட்சி” திட்டத்தின் கீழ் எமது சகோதர கழகங்களுக்கு பயன் தரும் மரங்கள் வழங்கப்பட்டது.

இவ் பரிசளிப்பு நிகழ்வில் வைத்து எமது தாய் கழகத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் இலண்டன் உதயசூரியன் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களையும், கனடா உதயசூரியன் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களையும் கௌரவிக்கும் முகமாக கௌரவிப்பு மடல் வழங்கப்பட்டது. அத்துடன் எமது கழகத்திற்காக நீண்ட காலங்களாக சிறப்பான சேவையினை மேற்கொண்டவண்ணமும், இந்த ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற முக்கிய காரணங்களில் ஒன்றாக நிகழ்ந்த திரு.த.சிவஞானம் அவர்களுக்கும் கௌரவிப்பு மடல் வழங்கப்பட்டது.

இறுதியாக கழகங்களுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் நடைபெற்ற இல்லங்களுக்கான பெருவிளையாட்டில் வெற்றி பெற்ற இல்லங்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டன. 2019ம் ஆண்டு நடைபெற்ற இல்லங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் பச்சை இல்லம் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டதுடன், சிவப்பு இல்லம் இரண்டாமிடத்தினை பெற்றுக்கொண்டது. இறுதியாக செயலாளர் செல்வன் செ.விதுசனின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here