யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 41 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணத்தின் கோப்பாய், மானிப்பாய் போன்ற பகுதிகளில் சிலர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய, வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் மூன்று விசே் குழுக்கள் அனுப்பப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை ஆறு வாள்வெட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கோப்பாய், மானிப்பாய், யாழ்ப்பாணம் மற்றும் சுன்னாகம் ஆகிய பகுதிகளில் நேற்றும் ,இன்றும் இடம்பெற்ற சுற்றிவளைப்புக்களின் போது, தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் 41 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.








