காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக சில பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. காலி மாவட்டத்தின் குருந்துவத்தை, வெலிபிட்டிமோதர, மஹாலபுகல, உக்வத்த, ஜின்தோட்டை (மேற்கு மற்றும் கிழக்கு), பியதிகம ஆகிய பிரதேசங்களில் நேற்று இரவு ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டது.
காலி மாவட்டத்தின் ஜின்தோட்டை பிரதேசத்தில் இரண்டு இனக் குழுக்களிடையே குறித்த முறுகல்நிலையேற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக விபத்து மற்றும் கால்பந்தாட்டப் போட்டியையடுத்து இந்ந முறுகல் நிலை வலுவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள் அடித்துடைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த பகுதியில் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர், பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய 200 க்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலகமடக்கும் பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளுடனும் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் இயந்திரங்களுடனும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 100 பேரும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக 7 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமைகளை கட்டுக்குள் கொண்டு வரும் முகமாக இன்று காலை 9 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.