1 கோடி பார்வையைக் கடந்து ஆளப் போறான் தமிழன்’
பாடலின் முதல் வரியே அரசியல் பார்வையுடன் இருந்தாலும் ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு யு டியுபில் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. யு டியூபில் வெளியிடப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாக இந்த சாதனையை இந்தப் பாடல் கடந்திருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் விவேக் எழுதிய இந்தப் பாடல் ‘மெர்சல்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலாக வெளியிடப்பட்டது. விஜய் படத்தின் பாடல்தான் என்றாலும் இந்தப் பாடலில் விஜய்யின் அருமை பெருமைகளைப் பற்றிப் பாடாமல் தமிழனின் அருமைஇ பெருமைகளைப் பற்றி அற்புதமான வரிகளை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் விவேக்.
இந்தப் பாடல் படத்தில் எப்படியும் விஜய்யின் அறிமுகப் பாடலாகத்தான் இருக்கப் போகிறது. முதல் நாள் முதல் காட்சியில் இந்தப் பாடலைக் கேட்க முடியுமா என்பது சந்தேகம் தான். அந்த அளவிற்கு விசில் சத்தம் காதைப் பிளக்கலாம்.
தன்னைப் பற்றிப் பெருமையாகப் பாடல் வருவதை விரும்பும் நாயகர்களுக்கு மத்தியில் இந்தப் படத்தில் இந்தப் பாடலை தமிழனின் பெருமையைப் பேச வைத்ததற்காக விஜய்க்கு ஏற்கெனவே ரசிகர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.