யாழ்ப்பாண மக்களை ஒன்றுதிரள வைத்த பட்டத்திருவிழா

0
875 views

யாழ்ப்பாண மக்களை ஒன்றுதிரள வைத்த பட்டத்திருவிழா

குணசேகரன் சுரேன்

வழமையாக அமைதியாக இருக்கும் தொண்டடைமானாறு வீதி, தைப்பொங்கல் தினமான 14 ஆம் திகதி மிகவும் போக்குவரத்து நெரிசலான வீதியாக மாறியது. அந்த வீதி வழியாக மக்கள் வெள்ளம் ஒன்று வல்வெட்டித்துறை நோக்கி படையெடுத்த வண்ணம் இருந்தது. வல்வெட்டித்துறையில் அப்படியென்ன நடக்கின்றது? வல்வெட்டித்துறையின் மைந்தன் மீண்டும் வந்துவிட்டாரா? என்று நினைக்கத் தோனும் அளவுக்கு கூட்டம் சென்றது.

உண்மையில், அவரைப் போன்ற, தனித்திறமையான வல்வெட்டித்துறை மைந்தர்களின் கலைத்திறமையின் நேர்த்தியை காண்பதற்காக மக்கள் கூட்டம் வல்வெட்டித்துறை நோக்கிப் படையெடுத்தது.

வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட விநோத பட்டத் திருவிழாவை காண்பதற்காகவே இந்த மக்கள் கூட்டம் அங்கு சென்றது. இந்தப் பட்டத் திருவிழாவை காண்பதற்காக யாழ்.மாவட்டத்தின் அனைத்துப் பிரதேச மக்கள், வெளிமாவட்ட மக்கள், ஏன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கூட அங்கு படையெடுத்தனர்.

போட்டி நடைபெறும் இடத்துக்கு சுமார் 1 கிலோமீற்றருக்கு முற்பட்ட தூரத்தில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் தடுப்பு போடப்பட்டு, வாகனத் தரிப்பிடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. குவிந்துவரும் மக்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த இவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இந்தப் பட்டப் போட்டி நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டு முதல் தைப்பொங்கல் தினத்தன்று நடைபெற்று வரும் இந்தப் பட்டப் போட்டியானது இவ்வருடம் 7 ஆவது ஆண்டாக நடைபெற்றது. வழமைக்கு மாறாக இம்முறை சுமார் 50 ஆயிரம் பேர் இந்தப் பட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.

இந்தப் பட்டப் போட்டியில் இலங்கையின் எப்பாகத்தில் இருப்பவர்களும் கலந்துகொள்ள முடியும். அந்தவகையில் இம்முறை பட்;;டப் போட்டியில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தம் 57 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

பட்டப் போட்டியின் வெற்றியாளர்கள் நடுவர் குழாம் ஒன்றினால் தெரிவு செய்யப்படுவார்கள் பட்டங்கள் தரையில் இருக்கும் போது, அவற்றின் ஆக்கம், தொழில்நுட்பத்திறன் மற்றும் அழகு (முப்பரிமாணத் தோற்றத்தின் வடிவமைப்பு) என்பவை தொடர்பான புள்ளிகள் பெறுகின்றன. தொடர்ந்து பட்டங்கள் பறக்கும் போது, உயரப் பறப்பதற்கான புள்ளியைப் பெறுகின்றது.

இதனடிப்படையில் இம்முறை பட்டப் போட்டியில் மகேந்திரன் பிரசாத் என்பவரின் 41 அடி இராசட்த ஓணான் முதலிடம் பிடித்தது. இரண்டாவது இடத்தை அதே கலைஞரின் அகதிகள் வண்டி பிடித்துக்கொண்டது. தொடர்ந்து மூன்றாமிடத்தை பி.ஸ்ரீராஜ் என்பவரின் பனிச்சறுக்கு வண்டி பெற்றுக்கொண்டது. தொடர்ந்து வந்த இடங்களை ம.லக்ஸ்மன் (கிடங்கு தோண்டு இயந்திரம்), ஸ்ரீதேசாதி நிதர்சன் (போர்ப்படகு), ப.மதியழகன் (உழவு இயந்திரம்), ஸ்ரீ.செந்தூரன் (நாகத்தலை), சி.ராஜ்குமார் (சுழல்பெட்டி பட்டம்), சி.சதாரூபன் (பறக்கும் ஒளிப்படக்கருவி) ஆகியன பெற்றுக்கொண்டன.

இதனைவிட சீ பிளேன், றொபோ, இராணுவ பீராங்கி, இராணுவ விமானம், சுழல்பட்டம், சற்லைட் உள்ளிட்ட பட்டங்களும் விண்ணில் பறந்தன.

முதலிடத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பரிசிலும், 2 ஆம் இடம் பெற்றவருக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசிலும், 3 ஆம் இடம் பெற்றவருக்கு 20 ஆயிரம் ரூபாய் பரிசிலும் வழங்கப்பட்டது. தொடர்ந்து 30 இடங்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

எந்தவிதமான வருமான நோக்கமுமின்றி, இந்தப் பட்டப் போட்டியை வருடாவருடம் மிகச் சிறப்புற நடத்தும் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தினரின் செயற்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது.

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் 1949 ஆம் ஆண்டு கிருபானந்த வாரியாரால் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் முதல் வானொலி ஒலிபரப்புச் செய்த சேவா நிலையமாக இது விளங்குகின்றது. அக்காலத்தில் மக்கள் சேவா நிலையத்துக்கு வருகை தந்து, சேவா நிலையம் முன்பாக கூடியிருந்து செய்திகளைக் கேட்டுச் சென்றுள்ளனர்.

இந்தச் சேவா நிலையத்தின் முன்னேற்றத்தை சுனாமி தூக்கிச் சென்று, அழித்தது. அதன் பின்னர் அங்கிருந்த மக்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் உதவியுடன் மீண்டும் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் வலுப்பெற்றது. முன்பள்ளி, வாசிகசாலை மற்றும் கல்வி சம்பந்தமாக மாணவர்களுக்கான உதவிகள் என இந்தச் சேவா நிலையத்தால் முன்னெடுக்கப்படுகின்றது.

ஒவ்வொரு பிரதேசங்களிலும் வாழ்கின்ற மக்கள் தம்முள் ஒவ்வொரு விதமான திறமைகளை வைத்துள்ளனர். வல்வெட்டித்துறை மண்ணின் மக்கள் அனைத்திலும் சாதிக்கக்கூடியவர்கள். அவர்களின் அனைத்து திறமைகளையும் தாங்களாகவே வெளிக்கொண்டு வந்துவிடுவார்கள். அந்த மக்களிடையே மறைந்திருந்த கலையுணர்வான பட்டம் கட்டும் திறமையை வெளியுலகுக்கு வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் முயற்சியானது மிகவும் மகத்தானது.

பட்டம் கட்டி ஏற்றுபவர்களை கேலி செய்யும் இந்தச் சமூகத்தில், அவ்வாறான திறமைசாலிகளுக்கு தனியான களம் ஒன்று அமைத்து, அவர்களின் திறமைகளை வெளியுலகுக்கு கொண்டு வந்து, அவர்களும் ஒரு கலைஞர்கள் இந்தப் பட்டப் போட்டி நிரூபித்துள்ளது.

அனைவரையும் கவர்ந்திழுக்கும் பட்டப் போட்டி தொடர்பாகவும், வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் தொடர்பாகவும் அதன் செயலாளர் அமரசேனாதிபதி வசீகரன் கருத்துக்கூறுகையில்,

‘உள்ளுர் மக்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் ஒட்டுமொத்த பங்களிப்புடன் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் சிறப்பாக தற்போது இங்குகின்றது. முன்பள்ளி, கழகம், ஆலயம் என இதன் செயற்பாடும் விரிவானது. எமது நிலையத்துக்கு லண்டனில் செயற்பாட்டு கிளையொன்றும் உள்ளது.

இந்தப் பட்டப் போட்டி யுத்தத்துக்கு முன்னரும் நடைபெற்றது. யுத்த காலத்தில்; இது கைவிடப்பட்டது. முப்பரிமாணத் தோற்றமுடைய பட்டங்கள் உருவாக்கும் கலைஞர்கள், தங்களின் அந்த கைவண்ணத்தை 5 அல்லது 10 பார்வையாளர்களுக்கு மாத்திரம் காண்பித்து ஒரு வட்;டத்துக்குள் இருந்தனர். இதனால் இவர்களுக்கான சரியான ஊக்குவிப்பு மற்றும் அங்கீகாரம் என்பன கிடைக்கவில்லை. அத்துடன் எமது கலையானது அழியக்கூடாது என்ற நிலையிருந்தது.

இதனால் இதனை மாபெரும் பட்டப் போட்டியாக நடத்த வேண்டும் என 2011 ஆம் ஆண்டு தீர்மானித்து நடத்தினோம். அன்று எமக்கு 1000 பார்வையாளர்கள் மாத்திரம் இருந்தனர். தொடர்ந்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக எமக்கான பார்வையாளர்கள் அதிகரித்தனர். அந்தவகையில் 2017 ஆம் ஆண்டு நாங்கள் நடத்திய பட்டப் போட்டியில் சுமார் 50 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தந்தனர்.

வருடாவருடம் இந்தப் பட்டப் போட்டிக்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை கருத்திற்கொண்டு, போட்டி நடைபெறும் மைதானத்துக்கு 1 கிலோமீற்றர் தூரத்துக்கு முன்பாக கட்டணம் அற்ற வாகனத் தரிப்பிடத்தை நடத்தினோம். அதனை மேற்பார்வை செய்வதற்கு சுமார் 20 பணியாளர்களை வேதன அடிப்படையில் நியமித்தோம்.

தைப்பொங்கல் தினத்தில் வரும் மக்கள் எந்தவித செலவுகளையும் செய்யாமல், சந்தோசத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்ட நாம், வாகனத் தரிப்பிடம் தொடக்கம் பார்வையிடுவது வரைக்கு எவ்வித கட்டணத்தையும் அறவிடவில்லை. பட்டப்போட்டி மாத்திரமின்றி, அதனுடன் இணைந்த வகையில் தென்னிந்திய கலைஞர்களின் இசை நிகழ்ச்சியையும் நடத்தியிருந்தோம். மேலும், எமது பிரதேசத்திலிருந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கான விசேட பரிசில்களையும் வழங்கியிருந்தோம்.

தொடர்ந்து 5 வருடங்கள் பட்டப் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு, இனிவருங் காலங்களில் உதவிகள் செய்யவுள்ளோம். அவர்கள் பட்டங் கட்டுவதற்கான செலவுகளை போட்டி நடைபெறும், 3 மாதங்களுக்கு முன்னர் வழங்கவுள்ளோம். இதனால், 1 பட்டத்தை கட்டுபவர் 2 பட்டங்களை கட்டுவதற்கு ஊக்குவிக்கப்படுவார்.

இந்தக் கடற்கரையை விருத்தி செய்யும் நோக்கில், கடந்த 2016 ஆம் ஆண்டு 7.7 மில்லியன் ரூபாய் செலவில் வடமாகாண சபையால் அணைக்கட்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை மேலும், விருத்தி செய்வதற்கு விருப்பமுள்ளது. இதன் மூலம் பட்டம் ஏற்றுவதற்கு தனியான திடலை உருவாக்க முடியும். இதற்கான ஊக்குவிப்பக்களைச் செய்வதற்கு தான் தாயாராகவிருப்பதாக இம்முறை நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வடமாகாண மீன்பிடி, வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் கூறினார். இது எங்களுக்கு ஊக்கமாகவுள்ளது. உள்ளுர், வெளிநாட்டு மக்களின் உதவிகள் மற்றும் வடமாகாண சபையின் உதவியுடன் இதனைச் செயற்படுத்த ஆர்வமாகவுள்ளோம்’ என்றார்.

இந்தப் பட்டப் போட்டியானது உதயசூரியன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றிருந்தாலும், அந்தப் போட்டியில் பங்குபற்ற முடியாத அல்லது எதிர்காலத்தில் தாமும் அதில் பங்குகொள்ள வேண்டும் என நினைத்தவர்கள், தாங்களால் தற்போது கட்ட முடிந்த பட்டங்களை அதன் பக்கங்களில் நின்று ஏற்றி, தங்களையும் பார்வையாளர்கள் பார்க்க வைத்தனர். அதில் சிலர், பட்டத்தின் மின்விளக்குகள் பொருத்தி ஏற்றினர்.

வருடாவருடம் நடைபெறும் இந்தப் பட்டப் போட்டி எதிர்காலத்தில் இன்னமும் முன்னேற்றமடைந்து, அதிகளவான பார்வையாளர்களை அங்கு கொண்டு சேர்க்கும்.

அந்த நிலைமையில், அங்கு பங்குபற்றும் போட்டியாளர்களும் அதிகரித்து, பட்டத்திடலும் எதிர்காலத்தில் விருத்தி செய்யப்படும் என்பதே ஏற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here