பத்திரிகை செய்தி இணைப்பு விபத்தில் ரஜீவன் உட்பட மேலும் 3 வல்வையர்கள் பலியானதாக அச்சம்.

0
1,388 views

நேற்றைய தினம் இடம்பெற்ற புதுக்கோட்டை வீதி விபத்தில் ஜெயகாந்தன் ரஜீவன் உட்பட மேலும் 3 வல்வையர்கள் இறந்ததாக அஞ்சப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விபரம்

தினத்தந்தி பத்திரிகையில் வெளியான செய்தி

புதுக்கோட்டை அருகே கோர விபத்து: கார் மீது அரசு பஸ் மோதியதில் சுற்றுலா பயணிகள் 5 பேர் பலி 9 பேர் படுகாயம்

கார்-பஸ் மோதல்

புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று இரவு வந்து கொண்டு இருந்தது. பஸ்சில் சுமார் 50 பயணிகள் பயணம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பொம்மாடிமலை என்ற இடத்தில் பஸ் வந்தபோது, முன்னால் புதுக்கோட்டைக்கு சுற்றுலா வந்து விட்டு திருச்சி நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது.

அந்த காரை பஸ் முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக கார் மீது பஸ் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

உடல் நசுங்கி பலி

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ரஜிவன்(வயது 30), சஜிதா(18), கிருபா(8) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் ரஜிவனின் உறவினர்கள் ஜீவாராணி(35), ரோமிலா, பாலதரணி, ஹேமா(22), சர்மிளா(21), சஞ்சய், சஞ்ஜீவ்(12), வரூண், வித்யா(10), தனுஷ் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்து, உயிருக்கு போராடினர். அவர்கள் உதவி கேட்டு அபய குரல் எழுப்பினர்.

அவ்வழியாக சென்றவர்கள் இதைக்கண்டு கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்த 11 பேரையும் மீட்டனர். இதில் ஜீவாராணி, வித்யா, தனுஷ் ஆகியோரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜீவாராணி பரிதாபமாக இறந்தார். வித்யா, தனுஷ் ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசார் விசாரணை

மேலும் ரோமிலா, பாலதரணி, ஹேமா, சர்மிளா, சஞ்சய், சஞ்ஜீவ், வரூண் உள்பட 8 பேர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே அவர்களில் ஒருவர் இறந்தார். அவரை பற்றிய பெயர் விவரம் தெரியவில்லை. மற்ற 7 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே உருக்குலைந்து கிடந்த காரில் இருந்து ரஜிவன் உள்ளிட்ட 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக புதுக்கோட்டை-திருச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here