இராணுவத் தளபதிக்கு அதிகாரத்தை இந்த நாட்டில் யார் வழங்கியது ; கேள்வி எழுப்பினார் சாந்தி சிறீஸ்காந்தராயா

0
708 views

தமிழ் மக்களின் காவல் தெய்வங்களாக போற்றப்படும் மரணித்த வீர மறவர்களை நினைவுகூற அனுமதிக்கப்பட முடியாது எனக் கூறும் அதிகாரத்தை இராணுவத் தளபதிக்கு இந்த நாட்டில் யார் வழங்கியது. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்காந்தராயா கேள்வி எழுப்பினார்.

இந்த நாடு சனநாயக நாடு எனவும், அதனை இன்னுமோர் அமைச்சர் 5 நட்சத்திர சனநாயக நாடு எனவும் மார்தட்டும் நிலையில் நாட்டில் மரணித்தவர்களை நினைவு கூறும் ஓர் நிகழ்வை தடை செய்வது என்பதே சனநாயக விரோத செயல் அதனை இராணுவம் முடுவெடுத்து செயல்படுத்த முனைவது சனநாயக விரோதம்.

அவ்வாறு இராணுவம்தான் இந்த விடயத்தில் முடிவினை எடுக்கும் என்றால் இந்த நாட்டில் தற்போது இடம்பெறுவது இராணுவ ஆட்சி . சனநாயக ஆட்சி கிடையாது. என்பதனை முதலில் அறிவியுங்கள். அதன் பின்பு உங்கள் முடிவுகளை நேரடியாக அறிவியுங்கள. இராணுவத் தளபதியே ஏதேச்சையாக முடிவை எட்ட முடியும் என்றால் ஓர் ஜனாதிபதி , பிரதமர் , நாடாளுமன்றங்கள் எதற்காக உள்ளது.

முப்படைகளின் தளபதியாக ஜனாதிபதி உள்ள நிலையில் இராணுவத் தளபதி கூறும் கூற்றிற்கு யார் பொறுப்பு. இந்தக் கூற்றுடன் முப்படைத் தளபதி பாதுகாப்பு அமைச்சு என்பனவும் உடன்பட்டா கூறப்பட்டது. இவ்வாறு இந்த ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வு அனுமதிக்கப்பட முடியாது எனில் கடந்த இரு ஆண்டுகளும் அனுமதித்தமை சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவே என்பதனை பகிரங்கமாக இதே இராணுவத் தளபதி ஒப்புக்கொள்ள வேண்டும்.

இதேநேரம் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி பிரதமருடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுக்கொள்ளும். ஏனெனில் தமிழ் மக்களிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடைப்பாடு இவர்களிற்கு உண்டு. அதனை விடுத்து படையினரைப் பேச விட்டு மக்களை கொதி நிலையாக்கி பின்னர் அதில் விபரீத முடிவுகளிற்கு வழி ஏற்படுத்திய பின்பு தீர்வை வழங்குவதாக எண்ணக்கூடாது.

இந்த நாட்டில் இடம்பெற்ற அனர்த்தங்களின் உண்மையை கணடறிந்து அதற்கு பொறுப்புக்கூறுவதன் மூலமே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என உலகமே ஏற்றுக்கொண்ட பின்பு படை அதிகாரிகளை ஏவி விடக்கூடாது. அவ்வாறு நிகழுமாயின் அதற்கான முழுப்பொறுப்பினையும் ஜனாதிபதியும் முப்படைத் தளபதியுமான மைத்திரிபால சிறிசேனாவே பதிலளிக்க வேண்டும்.

ஏனெனில் தமிழ் மக்களின் உறவுகள் மடிந்த தினங்கள் ஒரு நாள் , இரு நாள் அல்ல ஆண்டில் வரும் 365 நாட்களும் உண்டு அவ்வாறு இருந்தும் ஒரு சில நாட்களில் மட்டும் கூட்டிணைந்து உறவுகளிற்காக கண்ணீர் சிந்தும் உரிமையைகூட பறிக்க முனைந்தால் வரலாறு மன்னிக்காது. அதன் விளைவுகளை தமிழ் மக்கள் அடுத்து வரும் தேர்தல்களிலும் அடுத்து வரும் ஐ.நா அமர்வுகளிலும் சிறப்பாக புரிய வைப்பார்கள் அப்போது அதற்கு பக்க பலமாகவும் முழுமையான ஒத்துழைப்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here