இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களிற்கான தண்டனைச் சட்டம் தற்போது இறுக்கப்பட்டுள்ளதா அல்லது தண்டனை குறைக்கப்பட்டுள்ளதா என பாமர மீனவர்கள் எழுப்பும் ஐயத்திற்கு விடை தேட வேண்டிய நிலமை உள்ளது.
உண்மையில் 2011 முதல் 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்து எந்த மாவட்ட எல்லைப் பரப்பிற்குள் கைது செய்யப்படுகின்றதோ அந்த மாவட்ட நீரியல் வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரிடம் கையளிக்க திணைக்கள அதிகாரிகள் அந்த மாவட்டத்தின் பிரதேச நீதிமன்ற எல்லைப் பரப்பைக்கொண்டு அதற்குரிய நீதவான் நீதிமன்றிற்கு ஓர் பீ அறிக்கை மூலம் சந்தேக நபர்களை முற்படுத்துவர் .
இவ்வாறு முற்படுத்திய காலத்திலும் 1979ம் ஆண்டின் 59 இலக்கச் சட்டத்தின் கீழேயே பீ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோதும் அவர்களிற்கான குற்றப்பத்திரம் தாக்கல் செய்வது கிடையாது. ஏனெனில் இச் சட்டத்தின் பிரகாரம் 2018ம் ஆண்டு மெப்ரவரி மாதம் வரையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக உயர் நீதிமன்றில் மட்டுமே வழக்குத் தாக்கல் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் மட்டுமே கானப்பட்டதனால் மாவட்ட நீரியல் வளத் திணைக்களம் தாக்கல் செய்யும் பீ அறிக்கைக்கு மேலதிகமாக சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்து வழக்கினை நடாத்துவதற்காக மாவட்ட நீரியல் வளத்திணைக்களம் காத்திருக்கும் அந்த காத்திருப்புக் காலத்தில் ஒவ்வொரு 14 நாட்களிற்கும் இந்திய மீனவர்களிற்கான விளக்க மறியல் நீடிக்கப்படும்.
இவ்வாறு காத்திருக்கும் காலத்தின் இறுதியில் சட்டமா அதிபர் திணைக்களமே குறித்த சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்பதன் அடிப்படையில் குறித்த சட்டமா அதிபர் திணைக்களம் எந்த எந்த நீதவான் நீதிமன்றங்களில் நீரியல் வளத் திணைக்களத்தினால் பீ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இந்திய மீனவர்கள் விளக்க மறியலில் உள்ளனரோ அந்த நீதிமன்றங்களிற்கு தமது முடிவினை அனுப்பி வைக்கும் அதாவது குறித்த மீனவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை என. அதன் அடிப்படியில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவித்தலின் பிரகாரம் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யாத அடிப்படையில் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
அவ்வாறு விடுவிக்கப்படும் மீனவர்களை இந்தியத் தூதரகங்கள் பொறுப்பெடுத்து இலங்கை இ இந்திய கடற்படையினரின் ஏற்பாட்டில் கடல் வழியாகவே அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு கடந்த 2013ம் ஆண்டிற்குப் பிற்பாடு மட்டும் 450 வரையான படகுகளில் ஊடுருவிய 3 ஆயிரம் வரையிலான இந்திய மீனவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் இலங்கை அரசிற்கும் உள்ளூர் மீனவர்களிற்கும் செலவு ஏற்படுகின்றதே அன்றி இந்திய மீனவர்களிற்கு எந்த பாதிப்பும் கிடையாது . அதன் காரணமாகவே தொடர்ந்தும் எல்லை நாட்டுகின்றனர். எனவே இறுக்கமான நடவடிக்கை வேண்டும் என காலத்திற்கு காலம் கோரிக்கை எழுந்தது. இருப்பினும் எந்தப் பயனும் கிட்டவில்லை.
இதே காலத்திலேயே 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ம் இலக்க திருத்தச் சட்டம் ஒன்று நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்டது. அதாவது தற்போதுள்ள 1979ம் ஆண்டு வெளிநாட்டு கடற் கலங்கள் தடைச் சட்டத்தின் பிரகாரம் ஓர் வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் மட்டுமே உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்பதனை நீரியல் வளத் திணைக்களம் நீதவான் நீதிமன்றம் ஒன்றில் வழக்கை தாக்கல் செய்து தீர்ப்பினை பெற்றுக்கொள்ளும் ஏற்பாடாக திருத்தப்பட்டது. வாய்ப்பு அல்லது திணைக்கள அதிகாரம் மாற்றப்பட்டதே அன்றி சட்டமும் தண்டனைகளும் பiழயவையே தான்.
இந்த மாற்றத்தின் பின்பு யூலை மாதம் 5ம் 6ம் திகதிகளில் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 16 பேரிற்பும் எதிராக ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய முற்பட்ட யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களம் வளமைபோன்று பீ அறிக்கை தாக்கல் செய்யத் தயாரானபோது கொழும்பில் இருந்து கிடைத்த அறிவுறுத்தலானது தற்போது மாவட்ட நீரியல் வளத் திணைக்களம் நேரடியாக நீதவான் நீதிமன்றம் ஒன்றில் பீ அறிக்கை அன்றி குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய முடியும் அதன் பிரகாரம் குற்றப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால் மாவட்ட நீரியல் வளத் திணைக்களம் முதல் நாள் உடனடியாக பீ அறிக்கையை சமர்ப்பித்ததோடு தற்போதைய திருத்தத்தின் பிரகாரம் தாமே குற்றப்பத்திரத்தையும் தாக்கல் செய்ய அவகாசம் கோரினர்.
இந்தக் காலத்தில்தான் குறித்த சட்டத்தின் பிரகாரம் என்ன தண்டனை என ஆராய்ந்தவர்கள் ஒரு மீனவருக்கு 5 மில்லியன்வரை குற்றப்பணம் 2 ஆண்டு சிறைத் தண்டனை படகுகளிற்கு 10 மில்லியன் குற்றப்பணமாம் ஆகவே இந்திய மீனவர்கள் இனி இலங்கை கடற்பரப்பினை எட்டியும் பார்க்க மாட்டார்கள் என உள்ளூர் மீனவர்கள் சிலர் ஆர்ப்பரித்தனர். இதனை இந்திய ஊடகங்களும் பூதாகாரமாகவே கான்பித்தனர்.
இந்த நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முதல் முறையாக வழக்கு இடம்பெற்றது. மீனவர்களின் தன்மைக்கேற்ப தண்டனை அறிவிக்கப்பட்டது. சிறைத் தண்டனைகளும் 5 ஆண்டுகளிற்கு ஒத்தி வைக்கப்பட்டதோடு உரிய மீனவர்களை நாட்டின் குடிவரவு குடியகள்வுத் திணைக்களம் ஊடாக விமானம் வழியாக நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டது. இதன் பின்பே சாதாரண மீனவர்களிற்கு இந்த வழக்கின் தன்மையும் புரிந்தது.
இது தொடர்பில் மாதகல் மேற்கு கிராமிய கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் விநாயமூர்த்தி – சுப்பிரமணியம்
விபரம் தெரிவிக்கையில் இ
2018ம் ஆண்டின் 2ம் இலக்க திருத்தச் சட்டம் வருவதற்கு முன்பு குறைந்த்து 3 அல்லது 4 மாதங்கள் இந்திய மீனவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அது ஓர் சிறிய அச்சமாக இந்திய மீனவர்களிற்கு இருந்தது. ஆனால் தற்போது ஒரு மாத காலத்திற்குள் தீர்ப்பளிக்கும்போது உடனடியாகவே விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். எந்தவொரு குற்றப்பணமும் கிடையாது. ஒத்தி வைக்கப்பட்ட காலத்திற்குள் மீண்டும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் வந்தால் மட்டுமே சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
இது இந்திய மீனவர்களிற்கு மேலும் ஆர்வத்தை அதிகரிக்குமோ என்ற அச்சமே எம்மிடத்தில் உள்ளது. அதாவது விமானத்தில் இலவசமாக பயணிக்க விரும்பும் மீனவர் படகில் எல்லை தாண்டினால் சில நாட்களில் விமானத்தில் போகலாம் என இந்திய மீனவர்கள் எண்ணினால் இங்கு வரும் மீனவர்கள் தொகையை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி உண்டு. ஏனெனில் மீனவர்கள் தொழில் புரியும் படகுகள் அதிகமாக அவர்களிற்கு சொந்தமானது கிடையாது . அதன் உரிமையாளர் பெரும் முதலாளியாகவே இருப்பார். எனவே கைது செய்யப்படும் இந்திய மீனவர்களிற்கு கண்டிப்பாக குற்றப்பணம் விதிக்க வேண்டும் என அமைச்சை கோரவுள்ளோம் .
அதற்காக இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அளவிற்கு மில்லியன் கணக்கிலோ அல்லது லட்சக் கணக்கிலோ அறவிட வேண்டும் என்றும் அல்ல. குறைந்த்து 50 ஆயிரம் ரூபா வீதம் முதல் தடவையாக குற்றப் பணம் விதிக்கும்போது அங்கே பல கேள்விகள் எழும் காலம் தாமதம் அடையும் அதனால் ஊடுருவலும் தடுக்கப்படும் என்றார்.








