ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், 80 க்கும் மேற்பட்ட முப்பரிமான பட்டங்கள் – பட்டப்போட்டித் திருவிழா 2019 பகுதி 1

0
1,101 views

தைத்திருநாளை முன்னிட்டு வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் கழகமும் ஒன்பதாவது முறையாக நடாத்திய பட்டப்போட்டித் திருவிழா நேற்றைய தினம் 15.01.2019 வல்வை உதயசூரியன் கடற்கரையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அலையெனத் திரண்ட மக்கள் கூட்டமும் ஒன்றன்பின் ஒன்றாய் விண்ணை நோக்கி பறந்த பட்டங்களும் வல்வையின் விண்ணையும் மண்ணையும் அலங்கரித்திருந்தன. கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களால் கடற்கரை நிறைந்திருந்தது. 80 பட்டங்கள் ஏற்றப்பட்டன. அழகாக கண்களை கவரும் வகையில் பல பட்டங்களும் அவற்றிற்கு போட்டியாக மக்கள் மனங்களை வெல்லும் வகைகளில் வீரம் நிறைந்த வடிவங்களில் ஏறின பல பட்டங்கள்.

ஒவ்வொரு பட்டமும் ஏதோ ஒரு கருத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே கட்டப்பட்டிருந்தததை காணக்கூடியதாக இருந்தது. ஒவ்வொரு பட்டத்திலும் அந்தந்த பட்ட வல்லுநனின் கலைஞனின் திறமையை, செக்கனுக்கு செக்கன் மாறும் காற்றின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் திறன் போன்றவற்றை காண முடிந்தது. உண்மையில் தைரியசாலிகள் வீரம் நிறைந்தவர்களால் அந்த இராட்சத பட்டங்களை ஏற்ற முடியும். அவ்வளவு பட்டங்களிலும் முதல் 3 பட்டங்களுக்கே சிறப்புப் பரிசும் 30 பட்டங்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்குவது என்பதால் ஒவ்வொரு பட்டமும் ஒன்றை ஒன்று சளைத்ததல்ல என்று நிரூபித்த வண்ணம் வானில் பறந்து கொண்டிருந்தன.

உணவகங்கள், சிற்றுண்டியகங்கள், குளிர்பான நிலையங்கள் என மக்களுக்காக அமைக்கப்பட்டிருந்தன.

இலங்கையின் முண்ணனி இசைக்குழு சாரங்காவுடன் இணைந்து ரமணி அம்மா மற்றும் Zee Tamil “சரிகமப” பாடகர்கள் வர்ஷா, ஸ்ரீநிதி,யஷ்கரன் சிங் ஆகியோரும் இன்னிசை மழையில் மக்களை மூழ்கடிக்க வைத்திருந்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here