தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய மத்திய குழுக் கூட்டத்திற்கு சென்ற பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளட் அமைப்பினர் பேரவையின் இணைத் தலைவரால் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
தமிழ் மக்கள் பேரவையின் ஒன்றுகூடல் நேற்றைய தினம் கந்தர் மடம் சந்தியில் உள்ள அலுவலகத்தில் இணைத் தலைவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
இதன் ஆரம்பத்தில் புளட் , ஈ.பீ.ஆர்.எல்.எவ் ,அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியினருடன் சில பொது அமைப்பின் பிரதிநிதிகளும் பங்குகொண்டிருந்தனர். இதன் ஆரம்பத்தில் புளட் அமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர் சிவநேசன் ,கட்சியின் செயலாளர் சதானந்தன் ஆகிய இருவரும் கலந்துகொண்டிருந்த நிலையில் இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்தியக் கலாநிதி லக்ஸ்மனால் வெளியேறுமாறு கூறியதனால் பெரும் குழப்பத்துடன் வெளியேறினர்.
இவ்வாறு வெளியேறிய புளட் அமைப்பைச் சேர்ந்த சிவனேசனிடம் இது தொடர்பில் கேட்டபோது ,
பேரவையின் முதலாவது ஆரம்பக் கூட்டத்திற்கும் எமது கட்சி சார்பில் நானே பங்கு கொண்டிருந்தேன். அதேபோன்று பேரவையின் அனைத்துச் செயல்பாடுகள் மட்டுமன்றி பேரணிகளிற்கு வீதி வீதியாகச் சென்று ஆட்களைத் திரட்டும் பணியில் நாம் ஈடுபட்டிருந்தோம் . அப்போது எமது உதவி தேவைப்பட்டது. அதேபோன்று எமது கட்சியின் தலைவரால் எனது சார்பில் நான் பங்கு கொள்வேன் என எமது கட்சித் தலைவரால் எனது பெயரை எழுத்தில் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பல கட்சிகளையும் உள்ளடக்கியே வெகுஜன அமைப்பாக பேரவை உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை பல கட்சிகள் அங்கம் வகித்தோம் இந்த நிலையில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கூறியதாக எம்மை வெளியேற்றியமைக்கு தனிக் கட்சி ஆதிக்கமெனில் காங்கிரஸ் கட்சி தொடர்பில் மக்களே அறிந்துகொள்வார்கள் எனத் தெரிவித்தார்.
இதேநேரம் குறித்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் ஊடகப் பேச்சாளர்களான கலாநிதி சரவணபவன் மற்றும் புவிதரன் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில் ,
புளட் அமைப்பைச் சார்ந்தவர்கள் உரிய முறையிலான அனுமதியினைப் பெற்றிருக்கவில்லை எனத் தெரிவித்ததோடு ஈ.பீ.ஆர்.எல்.எவ் அமைப்பு சார்பில் அதன் தலைவர் க.சுரேஸ் பிறேமச்சந்திரன் தனது சகோதரனே கலந்துகொள்வார் என முற்கூட்டியே அறிவித்தபடியால் அனுமதிக்கப்பட்டார் எனத் தெரிவித்தனர்.








