நீண்ட கால காத்திருப்புகளுக்கு பின் இலங்கை தேசிய கிரிக்கட் அணியில் ஓர் தமிழ் வீரன்..

0
700 views

நீண்ட கால காத்திருப்புகளுக்கு பின் 19 வயதிற்குற்பட்ட இலங்கை தேசிய கிரிக்கட் அணியில் ஓர் தமிழ் வீரன்..

தேசிய அணிக் கனவு என்பது ஒவ்வொரு வீரர்களுக்கும் நிச்சயமாக இருக்கின்ற ஒன்றுதான். ஆனாலும் தேசிய அணிக்கு விளையாட தகுதி இருந்தும் பல காரணங்களால் பலருக்கு அது நிறைவேறாத கனவாகவே முடிந்து விடுகின்றது. தேசிய அணிக்கனவோடு பயணித்த பல லட்சம் வீரர்களில் பல தடைகளுக்களுக்கு அப்பால் தமது திறமைகளால் தற்போது தமது இலட்சியத்தை அடைந்துஇ தற்போது சர்வதேச மட்டத்தில் நுழைந்திருக்கிறார் யாழ் மத்திய கல்லூரியின் மைந்தன் விஜயகாந்த் வியாஸ்காந்த்.

இலங்கை போன்று ஒரு நாட்டில் ஒரு சிறுபாண்மை இனத்தவர் தேசிய அணியினை பிரதிநிதித்துவப்படுத்தவதற்கு எவ்வாறான ஒரு போராட்டங்களை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்பது வார்த்தைகளில் கூறி கடந்து விடக் கூடியது அல்ல.

உதைபந்தாட்டத்தை பொறுத்த வரை தேசிய அணியில் தற்போது நம்மவர்கள் தொடற்சியாக கனிசமான இடங்களை பிடித்தவண்ணமே உள்ளார்கள். தற்போது நீண்ட கால இடைவெளிக்கு பின் வடக்கு கிழக்கினை சேர்ந்த ஒரு தமிழ் வீரன் ஒருவன்இ 19 வயதிற்குற்பட்ட இலங்கை தேசிய கிரிக்கட் அணியினை பிரதிநிதித்துவப்படுத்துகிறான்.

இலங்கை கிரிக்கெட் சபை நடத்திய மாகாண அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட ஒரு நாள் தொடரில் வட மாகாண அணிக்காக திறமையை வெளிப்படுத்தியதை அடுத்து, இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான தொடருக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வரும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியானது ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (24) ஆரம்பமானது.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் முதல் விக்கெட்டை வலதுகை சுழற்பந்து வீச்சாளர் செனரத்னவினால் வீழ்த்த முடிந்தது. இந்திய அணித்தலைவர் ரவாத் 11 ஓட்டங்களுடன் செனரத்னவின் பந்துக்கு போல்டானார்.

எனினும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆரம்ப வீரர் அதர்வா டயிட் மற்றும் பவன் ஷா ஜோடி இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இருவரும் முதல் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை வரை துடுப்பெடுத்தாடி 263 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இதன்மூலம் இந்திய அணி 300 ஓட்டங்களை கடந்தது.

இந்த இணைப்பாட்டமானது இளையோர் டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்களை சமப்படுத்துவதாகும். 2007ஆம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற இலங்கை இளையோர் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய இளையோர் அணியின் அபினவ் முகுந்த் மற்றும் தன்மாய் ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 263 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

இவ்வாறான ஒரு நிலையில், தனது சுழல் பந்துவீச்சினால், வியாஸ்காந்த் அபாரமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த அதர்வா டயிடின் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் விக்கெட் காப்பாளர் மதுஷ்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். சாதனை இணைப்பாட்டத்தை (263) முறியடித்த வியாஸ்காந்த் தேசிய அணிக்காக தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். இன்றைய நாளில் 18 ஓவர்கள் பந்துவீசிய வியாஸ்காந்த், 80 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து முக்கியமான விக்கெட்டை வீழ்த்தினார்.

பல கனவுகளோடு தனது சர்வதேச அறிமுகத்தினை மேற்கொண்டிருக்கும் நம்மவனை வாழ்த்துவதோடு, இன்னும் பல உச்சங்களை அடைந்து எமது மண்ணிற்கு பெருமை சேர்க்க எல்லாம் வல்ல ஆண்டவனை நாமும் வேண்டுகிறோம்..

வாழ்த்துக்கள் சகோதரா…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here