இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்கரையில் தாய்லாந்து நாட்டு மூங்கில் வீடு ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது.
மூங்கிலால் அமைக்கப்பட்ட தளத்தை கொண்ட சிறிய வீடு ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியதாக சொல்லப்பட்டுள்ளது. கடலில் இது காணப்பட்டபோது யாதாயினும் ஒரு படகாக இருக்கலாம் எனச் சந்தேகித்த மீனவர்கள் அதனை அண்மித்து பார்த்தபோது அது ஒரு மூங்கில் வீடாக இருப்பதைக் கண்டு அதனைக் கரைக்கு கட்டி இழுத்துவந்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டின் கொடியுடன் காணப்படும் குறித்த மூங்கில் வீடானது தாய்லாந்து மக்களின் பிதிர்க் கடனுக்காக அமைக்கப்பட்ட வீடாக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சிறிய குடிலின் நடுவே கிண்ணம் ஒன்று காணப்பட்டதுடன் அதனைச் சுற்றி அரிசி உள்ளிட்ட தானியப் பொருட்கள் சிதறிக் காணப்பட்டுள்ளன.
இதேவேளை தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகியவற்றிற்கு இடையில் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் நிகழக்கூடிய நீரோட்டம் காணப்படுவதாகவும் இந்த நீரோட்டத்தின் காரணமாகவே இது இவ்வாறு இழுத்து வரப்பட்டிருக்கலாம் எனவும் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.