வருடா வருடம் தைப்பொங்கல் தினத்தில் வல்வெட்டித்துறையில் நடைபெறும் பட்டப்போட்டி திருவிழாவும் – இசை நிகழ்ச்சியும் இலங்கையில் வாழும் தமிழர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்வாகும்.
இந்த வருடம் 15.01.2020 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் நடைபெறவுள்ள வல்வை பட்டப்போட்டி திருவிழாவின் ஆயத்த வேலைகளை வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும் வல்வை உதயசூரியன் கழகமும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.
அதே நேரம் பட்டத்திருவிழாவினைத் தொடர்ந்து மாலை 07.00 மணிக்கு நடைபெறும் சுப்பர் சிங்கர் நட்சத்திரங்களின் இசை நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் உபதலைவர் திரு.துரைச்செல்வம் (தங்கமயில் இல்லம்) அவர்கள் நேரடியாக இந்தியா சென்று வந்துள்ளார். இது சம்பந்தமான மேலதிக விபரங்களை அவரிடமே நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்வோம்.
கேள்வி : நீங்கள் இந்தியா சென்று வந்ததன் நோக்கம் என்ன?
செல்வம்:- வல்வை பட்டப்போட்டி திருவிழாவும் இசை நிகழ்ச்சியும் 50000 இற்கு மேற்பட்ட மக்கள் வருகை தரும் ஒரு நிகழ்வாகும். அத்துடன் வருகை தரும் மக்களிடையே எதிர்பார்ப்பும் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துச் செல்கிறது. அந்த வகையில் மக்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஒழுங்குகளைச் செய்வதற்காக நேரடியாக இந்தியா சென்று பாடகர்களுடனும் தொலைக்காட்சி நிறுவனங்களுடனும் பேசி விட்டு வந்துள்ளேன்.
கேள்வி – ZEE TV யின் சரிகமப இறுதிப் போட்டியில் பார்வையாளராக அமர்ந்திருந்தீர்கள் இது எப்படி சாத்தியமாகிற்று?
செல்வம்: – ZEE TV யின் சரிகமப இறுதிப் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இந்தியா சென்றடைந்தேன். போன வருடம் பட்டப்போட்டி திருவிழாவிற்கு ZEE TV வெற்றியாளர்கள் வர்ஷா ஸ்ரீநிதி ரமணி அம்மாள் யஸ்கரன் சிங் ஆகியோரை அழைத்து வந்திருந்தோம். வேறு சில நிகழ்ச்சிகளையும் ஒழுங்கு செய்திருந்தேன். அத்துடன் நான் தொடர்பு கொண்டவுடன் என்னை இறுதிப் போட்டிக்கு அழைத்ததுடன் பல பாடகர்களையும் ஒரே இடத்தில் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
கேள்வி: – விஜய் TV இன் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நீங்கள் நடுவர்களுக்கு அடுத்த வரிசையில் அமர்ந்திருந்ததைப் பார்த்தோம். இது எவ்வாறு நடந்தது?
செல்வம்: – இதற்கு முன்னர் விஜய் TV சார்ந்த வடிவேல் பாலாஜி, பாலா, அமுதவானன், சாய்த், பார்வதி, சோனியா, ஹரிகரன், ராஜகணபதி என்று பலரை வல்வை பட்டப்போட்டி திருவிழாவின் இசை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருக்கின்றோம். இந்த வருடம் பாடகர்களை அழைப்பது பற்றி கதைப்பதற்காக வந்துள்ளேன் என்று தெரிய வந்த போது அவர்களாகவே நேரில் விஜய் TVக்கு வாருங்கள் நிகழ்ச்சியையும் பார்த்து பாடகர்களுடனும் கதைக்கலாம் என அழைத்தார்கள். எனவே நேரடியாகவே சென்று நிகழ்ச்சியை பார்த்ததுடன் பாடகர்களையும் சந்தித்தேன்.
கேள்வி:- இந்த பயணத்தில் யார் யாரை எல்லாம் சந்தித்தீர்கள்?
செல்வம்:- Zee TV அஸ்லம், கார்த்திக், சுகன்யா, சரவெடி சரண், ரமணி அம்மா
Vijay TV யில் மூக்குத்தி முருகன், விக்ரம், புண்ணியா, கௌதம், பார்த்திபன், பூவையார், பிரியங்கா, மா.கா.பா ஆனந்து என பலரையும் சந்தித்தேன்.
முக்கியமாக அன்றைய நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த இசையமைப்பாளர் திரு.அனிருத் அவர்களையும் சந்தித்து பேசியமை மிக்க மகிழ்ச்சி
கேள்வி:- உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒரு பயணத்திலேயே பலரையும் சந்தித்து விட்டு வந்துள்ளீர்கள். இனிமேல் முக்கியமான கேள்விக்கு வருவோம். இந்தவருடம் வல்வை பட்டப்போட்டி திருவிழாவிற்கு யார் யார் எல்லாம் வருகின்றார்கள்.
செல்வம்:- Zee TV, சரிகமப ,Vijay TV Super singer இரண்டு நிகழ்ச்சியிலும் வெற்றி பெற்றவர்களை அழைத்து வருவதற்குத்தான் முயற்சிக்கின்றேன். ஆனால் வெற்றி பெற்ற பின் TV நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட பின்பு தான் வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும் என்ற விதி இருப்பதால் TV நிலைய பொறுப்பாளர்களுடன் பேசி விட்டு வந்திருக்கின்றேன். விரைவில் யார் யார் வருகிறார்கள் என்ற விபரத்தை உங்களுக்கு அறியத் தருகின்றேன். எப்படியும் 4-5 நட்சத்திரங்கள் வருகை தருவார்கள்.
கேள்வி:- இறுதியாக ஒரு கேள்வி. நீங்கள் திரு A.R.ரகுமான் அவர்களையும் சந்தித்ததாக அறிகின்றேன் அது பற்றிக் கூறுங்கள்?
செல்வம் : A.R.ரகுமான் அவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். அது இந்த முறை நிறைவேறியுள்ளது. அவரை நேரடியாக சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியான விடயம்.
ஆங்கிலத்தில் ஒரு வசனம் உள்ளது “Nothing is impossible”. : A.R.ரகுமான் அவர்களை யாழ்ப்பாணம் அழைத்து வந்து இசைநிகழ்ச்சி நடாத்த வேண்டும் என்ற என்னுடைய முயற்சி விரைவில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.




































