பொதுவெளியில் பெரிதும் மதிக்கப்படும் உலக தலைவர்கள், மன்னர்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள் என பலரும் ரகசியமாகவும் குறுக்கு வழிகளிலும் பணத்தையும் சொத்துகளையும் குவித்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.
ஜோர்டான் மன்னர், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் என பலரும் இதில் சிக்கியிருக்கிறார்கள்.
300-க்கும் மேற்பட்ட தலைவர்கள் வரி ஏய்ப்புக்கு உதவும் வெளிநாட்டு ரகசிய நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பது ‘பண்டோரா பேப்பர்ஸ்’ எனப்படும் மிகப்பெரிய ஆவணக் கசிவின் மூலம் தெரியவந்திருக்கிறது.
பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ஜோர்டான் மன்னர் அப்துல்லா குவித்திருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
11 வயதுச் சிறுவன் பெயரில் சுமார் 330 கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கியிருப்பதும் ஆவணங்களில் தெரியவந்திருக்கிறது.
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயரும் அவரது மனைவியும் லண்டனில் அலுவலம் வாங்கும்போது முத்திரைத் தீர்வையை தவிர்ப்பதற்கு குறுக்கு வழியைத் தேர்வு செய்திருப்பதும் பண்டோரா ஆவணங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.
லண்டனில் அலுவலகத்தை வாங்குவதற்காக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றை அவர்கள் வாங்கியிருப்பதாக ஆவணங்கள் கூறுகின்றன. இதன் மூலம் சுமார் 3.1 கோடி ரூபாய் அளவுக்கு அவர்களுக்கு ஆதாயம் கிடைத்திருக்கிறது.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் மொனாக்கோ நாட்டில் ரகசியமாகச் சொத்துக் குவித்திருப்பதும் ஆவணங்களில் அம்பலமாகி இருக்கிறது.
இந்த வாரத்தில் தேர்தலைச் சந்திக்க இருக்கும் செக் நாட்டு பிரதமர் ஆண்ட்ரேஜ் பாபிஸ், பிரான்ஸ் நாட்டில் இரு ஆடம்பர மாளிகைகளை வாங்குவதற்காக வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. இந்த விவரங்கள் அவரை தனது பிரமாணப் பத்திரங்களில் அவர் அறிவிக்கவில்லை.
பனாமா பேப்பர்ஸ், பாரடைஸ் பேப்பர்ஸ், லக்ஸ்லீக்ஸ், ஃபின்சென் ஃபைல்ஸ் போன்ற பெரும் ஆவணக் கசிவுகளின் வரிசையில் பேண்டோரா பேப்பர்ஸ{ம் இணைந்திருக்கிறது.
650 செய்தியாளர்களை உள்ளடக்கிய சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் கூட்டமைப்பு இந்த ஆவணங்களை ஆய்வு செய்து விவரங்களை வெளியிட்டிருக்கிறது.








