சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட இந்துக்களுக்கு சிவராத்திரி விரதமானது மிகவும் முக்கியமான ஒரு விரதமாகும். இந்த வருடத்திற்குரிய அச் சிறப்பான நாள் (04.03.2019) நாளைய தினமாகும். இரவு முழுவதும் விழித்திருந்து சிவ நாமங்களைப் பாடி வழிபடுவது வழமை.
வருடத்தில் 365 நாட்கள் இருக்க அன்று மட்டும் ஏன் கண் விழிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது???
சிவராத்திரி இரவு என்பது நிலவின் சுழற்சிக்கணக்கில் , ஒரு மாதத்தின் 14வது நாள் அதாவது அமாவாசைக்கு முந்தின நாளாகும். இது தான் ஒரு மாதத்தில் மிகவும் இருளான நாள். ஒரு வருடத்தில் ஒவ்வொரு மாதமும் முறைப்படி மொத்தம் 12 சிவராத்திரிகள் வரும் அவற்றில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியே மற்ற சிவராத்திரிகளை விடசக்தி வாய்ந்தது. இது தான் மகாசிவராத்திரி எனப்படுகிறது.
மகாசிவராத்திரி தினத்தன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு, இயற்கையாகவே எமது உயிர்ச்சக்தியை மேல் நோக்கி எழும்பச் செய்கிறது. அதனால் அன்றிரவு முழுவதும் விழிப்புடன் முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி நகர்ந்திடும். பல யோகிகள், முனிவர்கள் இந்நாளைப் பயன்படுத்தி முக்தி அடைந்திருக்கின்றார்கள். வெறும் கண் விழித்திருக்கும் ஒரு நாளாக இல்லாமல் அதி தீவிர விழிப்புணர்வும், உயிரோட்டமும் ஊற்றெடுக்கும் நாளாக இது அமைந்திட வேண்டும். இயற்கையே வழங்கும் இந்த இணையில்லா வரத்தைப் பயன்படுத்துவதே இவ் மகாசிவராத்திரி விரதத்தின் தார்ப்பரியம்.

சிவனை வழிபடுவதில் முக்தியைத் தரும் விரதம் இதுவாகும். அன்று இரவு முழுவதும் சிவாலயங்களில் சிறப்பான விசேட பூஜைகளும், அபிஷேசகங்களும் இடம்பெறும். பஞ்சாட்சர மந்திரம் ஒலிக்கும். சிவராத்திரி விரதம் இருப்போருக்கு சிவனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகையின் அருளும் கிட்டும். சிவன லிங்கத்தில் எழுந்தருளி அருள் புரிகின்ற நாளே சிவராத்திரி நாள். பிரம்மனும், திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று அறிந்து கொள்வதற்காக ஈசனின் அடி முடிகளைத் தேடிய போது இருவரும் தொட முடியாமல் சிவபெருமான் அருள்ஜோதியாக ஒளி வீசிய நாளே சிவராத்திரி என்றும் சொல்லப்படுகின்றது.







