வடக்கு மாகாண பாடசாலைகளில் காவலாளி மற்றும் பாடசாலை உதவியாளர்களாக 270 பேரை நியமிப்பதற்கான சந்தர்ப்பம் உள்ள நிலையில் வடக்கு மாகாண அமைச்சரவை அனுமதி பெறுவதில் உள்ள தாமதம் காரணமாக காலம் தாழ்த்தப்படுவதாக சுட்டிக காட்டப்படுகின்றது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் நிலவும் காவலாளி மற்றும் பாடசாலை உதவியாளர்களிற்கான வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆளணி அங்கீகாரம் உள்ள வெற்றிடங்களை நிரப்ப கல்வி அமைச்சு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன் பிரகாரம் தற்போது இரு பணிகளிற்கும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் மொத்தம் 270 வெற்றிடங்கள் கானப்படுகின்றன.
இவ்வாறு கானப்படும் 270 வெற்றிடங்களையும் நிரப்புவதற்காக பத்திரிகை விளம்பரம் போரல் மூலம் விண்ணப்பங்களைப் பெற்று அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று பணி நியமனத்தை வழங்க ஏற்பாடுகளை செய்ய முடியும். இருப்பினும் தற்போது இதற்கான அனுமதியை பெறுவதற்காக வடக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரத்தினை பெற முடியாது. ஏனெனில் வடக்கு மாகாண அமைச்சர் வாரியம் தொடர்பில் உள்ள சட்டப் பிரச்சணை காரணமாக அமைச்சரவையை கூட்டுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் மறு அறிவித்தல் வரைக்கும் ஒத்திவைத்துள்ளார்.
இவற்றின் அடிப்படையில் குறித்த பணிகளிற்கான விண்ணப்பம் கோரலிற்கான அனுமதி பெறுவதில் உள்ள இடைநூயூறு காரணமாக மேலும் காலதாமதம் அல்லது வடக்கு மாகாண சபையின் ஆயுட் காலமான ஒக்ரோபர் 25ம் திகதிவரை காத்திருக்கும் நிலமை ஏற்படுமோ என்ற அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வடக்கு இளைஞர்களிற்கான வேலை வாய்ப்பு சந்தர்ப்பத்தை காலம் தாழ்த்தாது மாற்று ஏற்பாடுகளின் மூலம் உரிய நியமனத்தை விரைவாக வழங்க ஆவண செய்ய வேண்டும். எனக் கோரிக்கை விடப்படுகின்றது.
இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது , குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இதன் பிரகாரம் உரிய வழி வகைகளில் விரைவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு விண்ணப்பம் கோரப்படும் எனப் பதிலளித்தார்.








