வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தைச்சேர்ந்த போக்குவரத்தும் பொலிஸ் அதிகாரியின் மூர்க்கமான தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இமையானன் கிழக்கு பாடசாலை வீதியைச்சேர்ந்த நற்குணம் லிசாத்தன் ( வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு காயமடைந்தவராவார்.
நேற்று முன்தினம் மதியம் தனது மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த பொலிஸ் அதிகாரி இளைஞனை அவரது பெற்றோருக்குத் தெரியாமல் தொலைபேசியில் உரையாடியது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவேண்டும் என மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றுள்ளார்.அங்கு விசாரணையை மேற்கொண்ட குறித்த பொலிஸ் அதிகாரி இளைஞனை கடுமையாகத்தாக்கியுள்ளார். இளைஞனை விசாரணை செய்வதும் பின்னர் யாருடனோ தொலைபேசியில் உரையாடுவதும் தாக்குவதுமாக ஈடுபட்டுள்ளார் . பின்னர் இரவு இளைஞனை 7 மணியளவில் விடுவித்த பொலிஸ் அதிகாரி இங்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வெளியில் யாருக்கும் தெரிவிக்கக்கூடாது என்று எச்சரிக்கை செய்துள்ளார் .
வீட்டிற்கு வந்த இளைஞனுக்கு தலைச்சுற்று மயக்கமடைந்ததை அடுத்து மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் தலையிலும் விலா என்புப்பகுதியிலும் காயமேற்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ் பிராந்திய நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.