மாலை நேர வகுப்புக்கள், விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் பாடசாலை வளாகத்தினுள் நடாத்தப்படக்கூடாது- சி.வி.விக்னேஸ்வரன்

0
225 views

மாலை நேர வகுப்புக்கள், விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் பாடசாலை வளாகத்தினுள் நடாத்தப்படக்கூடாது- சி.வி.விக்னேஸ்வரன்

ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர வகுப்புக்கள், விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் ஆகியன பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடாத்தப்படக்கூடாது.
அவ்வாறு நடாத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி புலோலி புற்றளை மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவும், பரிசளிப்பு விழாவும் இன்று காலை நடைபெற்றது அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்ச் சமூகம் பொதுவாகக் கல்வியில் உயர்ந்தவர்களாக, ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களாக, நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக, கடும் உழைப்பாளிகளாக இனம் காணப்பட்ட சமூகம்.
தூர நோக்கின்றி தருணத்திற்குப் பொருத்தமாக தன்நல காரணங்களுக்காக நாங்கள் தவறான பாதையில் சென்று விட்டோம் என்பதை இனியாவது நாம் உணர வேண்டும். எனவே கல்வி நடவடிக்கைகளில் ஆசிரியர்களின் செயற்பாடுகள் பற்றி இறுக்கமான சில தீர்மானங்களை கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகள் மூலம் அனுப்ப வேண்டிய கால கட்டாயத்திற்கு நாம் உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம் என்று நான் நம்புகின்றேன்.
உதாரணத்திற்குத் தனி ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர வகுப்புக்கள், விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் ஆகியன பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடாத்தப்படக்கூடாது. அவ்வாறு நடாத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.
மேலும் ஒரு ஆசிரியர் ஒழுக்க நெறி பிறழ்வில் ஈடுபட்டிருப்பது தெரிந்தும் அதனை உடனடியாக உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தாமல் மறைப்பதுங் கூட தண்டனைக்குரிய குற்றமாகும். இவற்றை நடைமுறைப்படுத்த நாம் முன்வர வேண்டும்.
ஓர் இரு ஆசிரியர்களின் தவறான பழக்க வழக்கங்கள் ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தையும் தலைகுனிய வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. நண்பர்கள்இ பழகியவர்கள் எனப் பிழை செய்பவர்களுக்கு உதவப் போய் நீங்களும் சேர்ந்து பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பெரும்பான்மை ஆசிரியர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள முடிவெடுத்தால் குற்றமிழைக்கும் ஆசிரியர்களை எளிதில் திருத்தி விடலாம். உங்கள் பெரும்பான்மையினரின் அழுத்தம் தவறு செய்பவரைக் கட்டுப்படுத்திவிடும். ஆனால் அதற்கென்ன என்று பெரும்பான்மையோர் சிந்திக்கத் தொடங்கினால் ஆசிரிய சமூகத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்படும்.
கணணி மூலமாக எங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டுவோம். ஆசிரியர்களுடன் நேரடித் தொடர்பின்றி கல்வி புகட்டுவோம் என்று பெற்றோர்கள் கூறத் தலைப்படுவார்கள்.
ஆகவே ஆசிரியர் சமூகம் மீண்டும் ஒரு உன்னதமான சமூகமாக மாற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என இச் சந்தரப்பத்தில் கூறி வைக்கின்றேன்.
ஒவ்வொரு பாடசாலையும் ஏனைய பாடசாலைகளுக்கும் மக்களுக்கும் முன்மாதிரியாக விளங்க இனிப் பாடுபடவேண்டும். அவை பாடசாலைகளாக இல்லாது கோவில்களாக மாற நாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கோவில்களாகத் தினமும் பூஜிக்கத்தக்க வகையில் பாடசாலைகள் மாற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
அதற்கு நாம் அனைவரும் சிந்தித்து நடவடிக்கைகளை எடுப்போம். எமது பாடசாலைகள் ஆத்மார்த்த கோவில்களாக மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை என மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here