கணினி, மொபைல் சாதனங்களை பாதுகாப்பதற்கும், இணையத்தளங்களில் பல்வேறு கணக்குகளை கொண்டிருப்பவர்களும் அவசியம் கடவுச் சொற்களை (Password) கொண்டிருப்பார்கள்.
அனேகமாக கடவுச் சொற்கள் ஆங்கில எழுத்துக்கள், விசேட குறியீடுகள், இலக்கங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.எனினும் இவ்வாறான கடவுச் சொற்கள் போதியளவு பாதுகாப்பானதாக இருப்பதில்லை.இதனால் பெருமளவிலான கணக்குகள் ஹேக்கர்களின் தாக்குதல்களுக்கு இலக்காவதுண்டு.
இப் பிரச்சினைக்கு தீர்வாக சமீப காலமாக கைவிரல் அடையாளத்தினை (Finger Print) கடவுச் சொல்லாக பயன்படுத்தக்கூடிய வசதி கூடுதலான இலத்திரனியல் சாதனங்களில் காணப்படுகின்றது.இத் தொழில்நுட்பமானது தனித்துவம் வாய்ந்ததாகவும், அதிக பாதுகாப்பு மிக்கதாகவும் காணப்படுகின்றது.
இவ்வாறிருக்கையில் கைவிரல் அடையாளம் மட்டுமல்ல மனிதர்களின் மண்டையோட்டிலிருந்து எழுப்பப்படும் ஒலியினையும் கடவுச் சொல்லாக பயன்படுத்த முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மண்டையோட்டு ஒலியானது கைவிரல் அடையாளம் போன்றே ஒவ்வொருவருக்கும் தனித்துவம் வாய்ந்தாக இருப்பதாக இம் முறைமையை கண்டுபிடித்த ஜேர்மன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்கள் 10 நபர்களை கொண்டு மேற்கொண்ட ஆய்வில் 97 சதவீதம் சரியான செயற்பாட்டினை காட்டுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.