நான்கு பக்கமும் கடல் சூழ்ந்திருக்கும் இலங்கைத் தீவுவை, இப்போது கடன் சூழ்ந்திருக்கிறது. கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகமோசமான பொருளாதார நெருக்கடியை இந்த ஆண்டு சந்தித்திருப்பதாக, இலங்கை அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. சீனாவிடமிருந்து கடன்பெற்றது போதாதென்று, இப்போது இந்தியாவிடமும் கடன்கேட்கத் தொடங்கிவிட்டது இலங்கை அரசாங்கம். இலங்கையின் தற்போதைய நிலை என்ன? கடனில் சிக்கித்தவிக்கும் நிலைக்குச் செல்ல காரணம் ?
இலங்கைப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை:
கடந்த 2019-ம் ஆண்டு 7.5 பில்லியன் டாலராக இருந்த அந்நிய செலாவணி இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சுமார் 2.8 பில்லியன் டாலராகக் குறைந்திருக்கிறது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டு மட்டும் 20 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது. இந்த ஆண்டில் மட்டும் 8 சதவிகிதம் என்ற அளவுக்குக் குறைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 3.6 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.
இந்தியாவிடம் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.3,750 கோடி) கடன்
இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் தற்போது இலங்கை அரசாங்கம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக, இந்தியாவிடம் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.3,750 கோடி) கடனாகக் கேட்டிருக்கிறது. இதற்காக, இலங்கை கொழும்புவிலுள்ள இந்திய தூதரகத்திடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக, சிலோன் பெட்ரோலிய கழகத்தின் தலைவர் சுமித் விஜேசிங்கே தெரிவித்திருக்கிறார்.
2020-ம் ஆண்டில் இலங்கையின் மொத்தப் பொருளாதாரத்தில் 80 சதவிகிதம் கடன்
அதேபோல், 2014-ம் ஆண்டு கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்காக சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டாலருக்கான திட்டத்தை அதிபர் ராஜபக்ஷே சீன அரசுடன் ஏற்படுத்திக்கொண்டார். இது இலங்கைத்தீவில் சீனாவின் மிகப்பெரியத் திட்டமாகக் கருதப்பட்டது. அடுத்தடுத்த ஆட்சிமாற்றத்தால் அந்தத் திட்டம் செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டது. 2020-ல் மீண்டும் ராஜபக்ஷே ஆட்சி ஏற்பட்டது. அதேவேளை தொடர்ந்து சரிந்துவந்த இலங்கைப் பொருளாதாரம், 2020-ம் ஆண்டில் இலங்கையின் மொத்தப் பொருளாதாரத்தில் 80 சதவிகிதம் கடனாக மாறியது. விளைவு, அம்பாந்தோட்டை துறைமுகத்தைப்போலவே கொழும்புத் துறைமுக நகரமும் 99 ஆண்டுகள் குத்தகைக்கு சீனாவிடம் கைமாறியது
முன்அனுபவம், சரியான திட்டமிடல் இல்லாமல் தீடீரென இயற்கை விவசாயக்கொள்கை:
முக்கியமாக, செயற்கை உரங்களுக்குத் தடைவிதித்து, முன்அனுபவம், சரியான திட்டமிடல் இல்லாமல் தீடீரென இயற்கை விவசாயத்துக்கு மாற வழிசெய்யும் இயற்கை விவசாயக்கொள்கைக்கு உத்தரவிட்டதால், இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி பெருமளவு பாதிப்படைந்தது. இதுதவிர, வெளிநாட்டு வங்கி, நிறுவனங்களிலிருந்து இலங்கை அரசு வாங்கிய கடனும் அடங்கியிருக்கிறது. இதுபோன்ற காரணங்களால், மேலும் மேலும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்ட இலங்கை அரசாங்கம், கடனை கட்டுப்படுத்துவதற்கு வழியில்லாமல், இன்னும் அதிகமான கடனை வாங்கிக் குவித்துவருகிறது.







