இலங்கையில் பாரிய உணவுத்தட்டுப்பாடும் தனிமைப்படுத்தல் ஊரடங்கும்- வல்வையின் களநிலவரம்

0
490 views

 

 

 

 

 

 

 

இலங்கையில் பாரிய உணவுத்தட்டுப்பாடு என்ற செய்திகள் உலகிலுள்ள பிரபலமான செய்தி நிறுவனங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில் வல்வெட்டித்துறையில் நிலைமை எவ்வாறுள்ளது என்பதற்காக களத்தில் இறங்கினோம்.
வல்வையில் இருக்கின்ற இரண்டு வெதுப்பகங்களில் ஒன்று பூட்டப்பட்டிருக்கின்ற நிலையில் திறந்திருக்கின்ற வெதுப்பக உரிமையாளரிடம் பேசினோம். “ பாணுக்கான மா முன்பு மாதிரி கிடைப்பதில்லை. எமக்கு தேவையாயின் ஒரு கிழமைக்கு முன்பே பணம் செலுத்தி ஒழுங்கு செய்ய வேண்டியுள்ளது. மாவின் விலை 950.00 ரூபாய்கள் கூடியுள்ளது. ஆனால் பாணின் விலை 5.00 ரூபாய்கள் மாத்திரம் கூடியுள்ளது. இலாபத்தின் நட்டத்தை பாராது தற்சமய நிலைமையைக் கருத்தில் கொண்டு செயற்படுவதாக கூறினார்.

அடுத்ததாக வேம்படியில் உள்ள ஒரு பலசரக்குக் கடை உரிமையாளரிடம் பேசினோம். “ ஊரடங்கினால் முன்பு மாதிரி வியாபாரம் நடைபெறுவதில்லை. சீனியின் அதிகபட்ச விலை 130.00 ரூபாய்கள். ஆனால் மொத்த வியாபாரிகள் 175.00 ரூபாய்க்கு விற்பனை செய்வதால் தங்கள் கடையில் சீனி விற்பனை செய்வதில்லை. அதே போலத்தான் மாவுக்குமான நிலை என்று கூறினார். பலசரக்கு கடைகள் திறக்க அனுமதியுண்டு. தனது கடை காலையில் 3 மணி நேரமும் மாலையில் 2 மணி நேரமும் ஒற்றைக்கதவில் வியாபாரம் செய்வதாக கூறினார். மக்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால் கூடுதாலன பொருட்களின் விலை கூடிவிட்டதாக மேலும் கூறினார். கூலி வேலை செய்பவர்களின் நாளாந்த சம்பளம் கூடிவிட்டதும் இதற்கு ஒரு காரணம் என்று மேலும் கூறினார்.

பலசரக்குக் கடை தவிர வேறு எந்த வியாபார நிலையங்களும் இப்போது திறப்பதற்கு அனுமதியில்லை. மரக்கறிகள், பழங்கள் ஆலடியிலும், நெடியகாட்டிலும் வண்டிலில் வைத்து விற்கப்படுகின்றது. ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து மரக்கறி சந்தைக்கு வியாபாரிகள் வருவதில்லை.ஆனால் இன்றிலிருந்து மரக்கறி சந்தைக்கு வெளியில் வைத்து மரக்கறிகள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடித்தல் வழமை போல் நடைபெறுகின்றது.

இலங்கையில் மேலும் 623 பொருட்களுக்கு வரி கூட்டப்பட்டுள்ளதால் இலங்கை மக்கள் எல்லோரையும் இந்த
உணவுத்தட்டுப்பாடும் பொருட்களின் விலையேற்றமும் பாதித்திருந்தாலும் அன்றாடம் உழைத்து உண்பவர்களை பெரிதாகப் பாதித்துள்ளது என்பதை உணரக்கூடியதாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here