கிளி. பல்லவராயன்கட்டில் உதயமாகியது தங்கப்பா ஞாபகார்த்த கணினி பயிற்சி நிலையம்
வல்வெட்டித்துறை வல்வை 21 நண்பர்கள் நடாத்தும், வல்வை விளையாட்டு கழகத்தின் தலைமுறைகள் கடந்த தலைவர் அமரர் மு.தங்கவேல் (தங்கப்பா) ஞாபகார்த்தமான “கணினி பயிற்சி நிலையம்”ஆனது, கிளிநொச்சி மாவட்டத்தின், பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பின்தங்கிய ஓர் கிராமமான பல்லவராயன் கட்டு எனும் கிராமத்தில், நேற்றைய தினம் (07.07.2019) அன்று மாலை 3.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குழும உறுப்பினர் திரு.பிரகலாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மங்கள விளக்கினை தங்கப்பாவின் நீண்டகால நண்பனும், பிரபலமான கரப்பந்தாட்ட வீரனுமாகிய திரு.தேவசிகாமணி (கட்டியப்பா), குச்சம் சரஸ்வதி ஆலயத்தின் தலைவர் திரு.ஞானவேல், வேலுப்பிள்ளை நிதியத்தின் நிறுவுனர் திரு.கஜேந்திரன், வல்வையின் பிரபல விளையாட்டுவீரர் திரு.சோ.கிருஸ்ணகுமார் (கிட்டிணியப்பா) மற்றும், குழுமத்தின் செயலாளர் திரு.க.அஜித் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
பின்னர் கணினி பயிற்சி நிலையத்தினை திரு.தேவசிகாமணி (கட்டியப்பா) அவர்கள் திறந்து வைத்தார். தலைமையுரையினை குழும உறுப்பினர் திரு.பிரகலாதன் வழங்க, வாழ்த்துரைகளை வேலுப்பிள்ளை நிதியத்தின் நிறுவுனர் திரு.கஜேந்திரன், திரு.தேவசிகாமணி (கட்டியப்பா) மற்றும் SECDA நிறுவன தலைவர் சசி ஆகியோர் வழங்கினார்கள். பின்னர் நன்றியுரையினை குழுமத்தின் உறுப்பினர் திரு.சி.ஜிவிந்தன் அவர்கள் வழங்கினார். முதற்கட்டமாக 15 மாணவர்கள் தமது கணினிப் பயிற்சிகளை நேற்றைய தினம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொடிய யுத்தம் நடைபெற்று பத்து ஆண்டுகளை கடந்தும் கூட இன்று வரை எந்த விதமான அபிவிருத்திகளும் அற்ற நிலையில் காணப்படும் குறித்த கிராமத்தில் வாழும் எமது எதிர்காலச் சந்ததிகளின் அழிக்க முடியாத சக்தியான கல்வியை போதிக்கும் முகமாகவும், கணினி மயமாகிக் கொண்டிருக்கும் இவ்வுலகில், அவர்களையும் எதிர்நீச்சல் போடுவதற்கு தயார்படுத்தும் குறிக்கோளுடனும் வல்வை 21 நண்பர்கள் குழுமத்தினால் முதலாவது கணினிப் பயிற்சி நிலையமானது, குறித்த கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
வல்வையின் இளம் வீரர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் எம் மக்களுக்கான சேவைகள், மேலும் தொடர எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
























































