வங்கதேசத்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: மீண்டும் ஹர்பஜன் சிங் டெஸ்ட் அணியில்….!

0
486 views

வங்கதேசத்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் மீண்டும் இடம் பெற்றார். வரும் ஜூன் 7ல் வங்கதேசம் செல்லும் இந்திய அணி ஒரு டெஸ்ட் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது முதல் டெஸ்ட் ஜூன் 10ம் தேதி துவங்குகிறது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்ய சந்தீப் படேல் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது.

இக்கூட்டத்தின் முடிவில் பி.சி.சி.ஐ., செயலர் அனுராக் தாகூர் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தார். இதன்படி சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தரப்படவில்லை. டெஸ்ட் அணிக்கு கோஹ்லி கேப்டனாக நீடிப்பார். இரண்டு ஆண்டுகளுக்குப்பின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் அணிக்கு திரும்பியுள்ளார். இவர் கடைசியாக, 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த டெஸ்டில் விளையாடினார். தற்போதைய, ஐ.பி.எல்., தொடரில் மும்பை சார்பில் விளையாடும் இவரின் செயல்பாட்டை (15 போட்டி, 18 விக்.,) கணக்கில் கொண்டு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

ஜடேஜாவுக்கு இடம் கிடைக்கவில்லை. வேகப்பந்துவீச்சில் இஷாந்த், உமேஷ், புவனேஷ்வர் உள்ளிட்டோர் வாய்ப்பு பெற்றுள்ளனர். தோனி டெஸ்டிலிருந்து ஓய்வு பெற்றதால், விக்கெட் கீப்பராக விரிதிமன் சகா அறிவிக்கப்பட்டுள்ளார். ஒரு நாள் போட்டிக்கு கேப்டனாக தோனி உள்ளார். இதில் ஜடேஜா சேர்ககப்பட்டுள்ளார். காயத்தால் (முழங்கால்) அவதிப்படும் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்குப்பதில், குல்கர்னி வாய்ப்பு பெற்றார்.

 

டெஸ்ட் அணி: கோஹ்லி (கேப்டன்), முரளி விஜய், தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, ரகானே, ரோகித், சகா, அஷ்வின், ஹர்பஜன், கரண் சர்மா, புவனேஷ்வர், உமேஷ், ஆரோன், இஷாந்த்.

 

ஒரு நாள் போட்டி அணி: தோனி (கேப்டன்), ரோகித், ரகானே, தவான், கோஹ்லி, ரெய்னா, ராயுடு, அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல், புவனேஷ்வர், உமேஷ், மோகித் சர்மா, பின்னி, குல்கர்னி.

மீண்டும் அணிக்குத் திரும்பியது பற்றி ஹர்பஜன் சிங் கூறுகையில், ‘‘இந்திய அணியில் இடம்பிடிக்கும் தருணத்திற்காக, கடந்த 2 ஆண்டுகளாக காத்திருந்தேன். இந்திய அணியின் ‘ஜெர்சியை’ அணிவதை விட, வேறு எதுவும் உயர்ந்தது இல்லை. புதிய பயணத்தை துவங்கியுள்ளதாக உணர்கிறேன். எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வேன். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அணியில் விளையாட தயாராக உள்ளேன். மூன்றுவிதமான போட்டிகளிலும் பங்கேற்பேன்’’ என்றார்.

ஹர்பஜன் தேர்வு ஏன் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் கூறியது:வங்கதேச அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ளனர். இதனால், ‘ஆப்ஸ்பின்னரான’ ஹர்பஜனை தேர்வு செய்தோம். இதில், கேப்டன் கோஹ்லியின் கருத்தும் கணக்கில் கொள்ளப்பட்டது. ஜடேஜா போன்ற வீரர்களையும் தேர்வில் விவாதித்தோம். ஆனால், எந்த ஒரு உணர்ச்சிகளுக்கும் இடம்தரவில்லை. எதிரணியின் பலம், உடல்தகுதி மற்றும் செயல்பாடு அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்துள்ளோம். ஓய்வு கேட்கவில்லை வீரர்கள் ஓய்வில்லாமல் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இது எங்களுக்கும் தெரியும். ஆனால், எல்லா அணியிலும் இப்படித்தான் உள்ளது.சில வீரர்கள் ஓய்வு வேண்டும் என கேட்டிருந்தால், நிச்சயம் தந்திருப்போம். ஆனால், இத்தொடரில் எந்த வீரரும் ஓய்வு கேட்கவில்லை. கடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இதில் மாற்றம் செய்ய விரும்பவில்லை. ஷமி காயத்திலிருந்து மீண்டு வர 4 வாரங்கள் தேவைப்படும் என்பதால் இடம்பெறவில்லை இவ்வாறு சந்தீப் பாட்டீல் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here