தமது 87ஆம் வயதில், கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலைப் பட்டப் படிப்பை (Masters) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் இலங்கையைச் சேர்ந்த வரதலெட்சுமி சண்முகநாதன்.
ஒவ்வொரு சொற்களுக்கு இடையில் நல்ல இடைவெளிவிட்டு, நிதானமாக தன் எண்ணங்களை ஒருங்கிணைத்துப் பேசும் இவர்தான், கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்திலேயே அதிக வயதில் பட்டம்பெறுபவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக உள்ளார்.
வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வேலணை (Velanai) கிராமத்தில் பிறந்த வரதலெட்சுமி, உலகிலுள்ள நான்கு கண்டங்களில் மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார்.
கல்வி மீதான தீரா காதலோடிருக்கும் வரதலெட்சுமியின் கற்றல் வாழ்கை அத்தனை சீராக இல்லை. இன்டர்மீடியட் தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சிபெற்றபோதிலும், இன, பாலின – சிறுபான்மை மாணவர்களுக்கு அளவான இடங்களே இருந்ததால் அவரால் இலங்கையில் தன் கல்வியைத் தொடர முடியவில்லை. தன் கல்வியைத் தொடர அவர் கடல் தாண்டி தமிழ்நாட்டுக்கு வந்தார்.
“கல்லூரி படிப்புக்கு என்னை வெளிநாட்டுக்கு அனுப்புமாறு என் ஆசிரியர்களில் ஒருவர் என் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார். எனவே அவர்கள் என்னை இந்தியாவுக்கு அனுப்பினர்” என்கிறார் வரதலெட்சுமி.










