அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆப்கன் மண்ணில் புகலிடம் தர மாட்டோம்” என்ற ஒற்றை வாக்குறுதியை மட்டுமே பெற்றுக்கொண்டு வெளியேறுகிறது அமெரிக்கா.
அவர்களே எதிர்பார்க்காத வேகத்தில் நாட்டைப் பிடித்த தாலிபன்கள், இப்போது ஆப்கனில் இருக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கே வழி தர மறுக்கிறார்கள். மற்ற நாடுகளும் தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பாக ஆப்கனிலிருந்து வெளியேற்றிக் கூட்டிச் செல்ல முடியாமல் தவிக்கின்றன.
இந்த எல்லாக் குழப்பங்களுக்கும் காரணம், அமெரிக்கா செய்துகொண்ட அவசர சமாதான ஒப்பந்தம்.
இப்போது, ‘ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேறிவிடவேண்டும் என தாலிபன்கள் மிரட்டுகிறார்கள். அமெரிக்காவை இந்தளவுக்கு கடுமையாக யாரும் மிரட்டியது கிடையாது.
இதற்கிடையில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மக்களை மீட்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்று கோரியிருக்கின்றன.
ஆனால் ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் உடன்பாட்டை மீறுவதாக அமையும் என தாலிபன்கள் கூறுகின்றனர். காலக்கெடுவுக்குப் பிறகும் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்தால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.









