தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பல கோயில்களில் ஏற்கெனவே பணியாற்றிய அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்படுகின்றன. இவை பொய்த் தகவல்கள் என்கிறது மாநில அரசு.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் அர்ச்சகர் பணியிடங்களுக்கு பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த 24 பேர் உட்பட 58 பேரை கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி நியமித்தது தமிழ்நாடு அரசு.
இவர்களில் 24 பேர், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் இந்து அறநிலையத்துறை நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்று, பணி வாய்ப்புக்காகக் காத்திருந்தவர்கள். இவர்களில் ஐந்து பேர் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்கள்.
ஆகஸ்ட் 14ம் தேதி பணி ஆணைகள் வழங்கப்பட்ட நிலையில், இவர்கள் அனைவரும் சுதந்திர தினத்தன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோயில்களில் பணியேற்றுக் கொண்டனர்.








