வேகமாக அதிகரித்து வரும் கொரோனாத் தொற்று நிலைமையினைக் கருத்திற் கொண்டு வட மாகாணத்தில் அனைத்து பொதுச் சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் ஆலோசனைக்கு அமைய வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வடமாகாணத்தில் கடந்த சில நாட்களுக்குள் விரைவாக அதிகரித்த கொரோனாத் தொற்று நிலைமையை அடுத்து மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டள்ளது. சந்தை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தம் உற்பத்திகளை வீதியோரம் அல்லது நடமாடும் விற்பனையை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு வியாபாரத்தை பரவலாக்கி வீதியோரங்களில் அல்லது தமது வதிவிடங்களில் அல்லது நடமாடும் விற்பனையில் ஈடுபட அனுமதியளிக்கலாம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பலர் வியாபாரம் செய்தலைத் தடை செய்ய வேண்டும். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலையை விரைவில் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








