கொழும்பு: இந்தியா- இலங்கை இடையே கடல் மேல் பாலம் கட்ட இலங்கை ஒப்புக்கொண்டதாக க கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியுள்ளார்.
இந்தியா- இலங்கைக்கும் இடையே சாலை போக்குவரத்தை மேம்படுத்திட ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பில் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடல் மேல் பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறினார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டு
இந்த விவகாரம் தற்போது இலங்கை அரசியலில் புயலை கிளப்பி வருகிறது. இது போன்ற ஆபத்தான திட்டத்திற்கு அதிபர் சிறிசேனா ஒப்புக்கொண்டார் என முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கை எதிர்க்கட்சி எம்.பி. ஒருவர் அளித்த பேட்டியில் இந்தியா-இலங்கை இடையே கடல் மேல்பாலம் அமைத்தால் , தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் இலங்கைக்குள் புகுந்து ஆக்கிரமித்துவிடுவார்கள் என்றார். மற்றொரு எம்.பி.யோ இந்தியா பாலம் கட்டினால் அதனை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்றார்.
இந்நிலையில் நேற்று தலைநகர் கொழும்பு நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா கூறியதாவது:
இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையே கடல்மேல் பாலம் கட்டுவதற்கான எந்த தீர்மானமும் போடப்படவில்லை. பாலம் அமைப்பது குறித்து இலங்கை மற்றும் இந்திய அரசுகள் எந்த விதமான பேச்சுவார்த்தையையும் மேற்கொள்ளவில்லை. அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு தேர்தலின்போது மக்களின் வாக்குகளை பெற சில அரசியல்வாதிகள் இதுபோன்ற பாலம் கட்டப்படும் என கூறியதை வைத்து இவர்கள் தேவையற்ற குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள். எதிர்க்கட்சியினர் மற்றும் “ராஜபக்சே ஆதரவாளர்கள் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்றார்.
பிரதமர் ரணில் மறுப்பு:
நேற்று இலங்கை பார்லிமென்ட் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இந்தியா-இலங்கை இடையே கடல்மேல் பாலம் கட்டஎந்த திட்டமும் இல்லை என்றார் திட்டவட்டமாக.