யாழ் நகரில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தலில்

0
508 views

சமூக பொறுப்பில்லாத ஒரு மனிதனால் யாழ்.மாவட்டத்தில் பலர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்திலிருந்து வருவோர் குறித்து மக்கள் விழிப்பாகவும் சுகாதார பிரிவுக்கு ஒத்துழைப்பும் வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக பணிப்பாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வருகை தந்த ஒருவர் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு எவ்வித தகவலையும் வழங்காததுடன், சுய தனிமைப்படுத்தலையும் கடைபிடிக்காது மாவட்டத்தில் உள்ள பல நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், மற்றும் உறவினர்கள், நண்பர்கள் போன்ற தனியார் வீடுகளுக்கும் சென்று வந்துள்ளார். பின்னர் அவரைப் பற்றிய தகவல் சுகாதார திணைக்களத்தினருக்கு கிடைத்ததை தொடர்ந்து இவர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினரால் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால், இவர் சென்று வந்த அனைத்து நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதுடன் நூற்றுக் கணக்கானவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு தனிமனிதனின் சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது பிரதேசங்களுக்கு வருகை தந்தோர் பற்றிய தகவல்களை அவர்களோ அல்லது பொதுமக்களோ தமது பிரிவு சுகாதார மருத்துவ அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர் அல்லது வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிலுள்ள 021 222 6666 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விவரங்களை அறியத்தர வேண்டும். இதன்மூலம் தங்களையும் சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை எம்மால் வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here