22.10.2014 அன்று வெளியிடப்பட்ட மலர்வனம் செய்தி
சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் சுற்றாடலில் வாழும் மக்களின் பாவனைக்காக மதவடிப்பாலமும், குப்பைத்தொட்டியும் கட்டித்தந்த அமரர் திரு.பரஞ்சோதி அப்பா அவர்களை இன்று நன்றியுடன் நினைவுகூறுகின்றோம்.
1970 ஆம் ஆண்டிற்கு முன்பு பழைய கிராமத்தின் தோற்றமும், அன்றைய காலத்தின் பலகை பாலமும் அதனூடாக ஊருக்குள் இருந்து வரும் மழை நீர் போகும் வழியாகவும் ஆதிகாலத்தை பறைசாற்றிக் கொண்டு இருக்கும் பெரும் புளியம் மரங்களும் இரவு 6 மணிக்கு பின்பு அந்தப் பாதையால் போவதற்கு பெரும் பயமாக இருந்த இடமும், குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாமல் நடு ரோட்டில் போடப்பட்டு பாடசாலை மாணவர்கள் தொடக்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வரை குப்பைகளை கடந்து சென்று கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் இற்றைக்கு சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் சுற்றாடலில் வாழும் மக்களின் நன்மைக்காக மதவடிப்பாலமும், குப்பைத்தொட்டியும் கட்டித்தந்ததுடன் பாலத்திற்கான பாதை அமைப்பதற்காக அந்தப் பெரும் புளியமரங்களை எல்லாம் அகற்றி அளக்கடவை ஒழுங்கையில் சுமார் 9 அடி அகலத்தில் 100 அடி நீளமான தனது காணியையும் வல்வை மக்களுக்கு கொடையாக வழங்கியிருந்தமையை இன்று நன்றியுடன் நினைவுகூறுகின்றோம்.
வல்வை நகரின் அடையாளங்களில் ஒன்றான அமரர் திரு.இரா.அரசரெத்தினம் அவர்களின் ஞாபகர்த்த வளைவும் 1974 ஆம் ஆண்டு திரு.பரஞ்சோதி அப்பா அவர்களாலேயே கட்டப்பட்டது.
இன்று நகரசபை நடவடிக்கைகளால் குப்பைத் தொட்டியின் தேவை நிறைவுற்ற நிலையில், உதயசூரியன் கழகத்தினர் அவ் இடத்தை அழகிய மலர்வனமாக மாற்றியுள்ளனர். இங்கு பரஞ்சோதி அப்பா ஞாபகர்த்த மலர்கள் மலர்வதை அனைவரும் கண்டு ரசிக்கலாம்.
செய்தி தொகுப்பு: சிகாமணி