இலங்கையின் ’அரச இசை விருது விழா’ நிகழ்வில் சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதினை மர்மக்குழல் இசையமைப்பாளர் சிவபத்மயன் வென்றுளார்.
ஈழத்துத் திரைப்படமான ஓவியா படத்தில் அமைந்த பாடலுக்காக இசையமைத்ததற்காகவே அவர் இந்த விருதினை வென்றுள்ளார்.
அரச இசை விருது விழா ஸ்ரீ லங்காவின் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வியாழக்கிழமை கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது.
இதனை உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இதில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் இசைப் பிரிவு பணிப்பாளரும் பிரபல இசைக் கலைஞருமான விசாரத தயாரட்ன ரணதுங்க வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றார்.
சிறந்த பாடகர் பிரிவில் சிங்கள மொழியில் துமால் வர்ணகுலசூரியவும்இ தமிழ் மொழியில் விஜயகுமார் நிரேஷனும் ஜனாதிபதியிடம் இருந்து விருது பெற்றார்கள்.
சிறந்த பாடகியருக்கான பிரிவில் சிங்கள மொழியில் று.பிரியங்கனியும் தமிழ் மொழியில் வி.ரோஷினியும் விருது வென்றார்கள்.
சிறந்த பாடலுக்கான தேசிய விருதை காளையன் பாடலுக்காக அருள்தர்சனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை ஓவியா திரைப்படத்தில் அமைந்த ஒரு பாடலுக்காக சிவபத்மயன் வென்றார்.
இசையமைப்பாளர் சிவபத்மயன்இ ஈழத்துக் கலைத்துறையில் வளர்ந்துவரும் ஓர் முக்கியமான இசையமைப்பாளராவார்.
ஈழத்தில் முதன்முதலாக மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சி நெடுந்தொடரானஇ ஐ.பி.சி தமிழ் ’மர்மக்குழல்’ நெடுந்தொடரின் இசையமைப்பாளராக சிவபத்மயன் விளங்கியுள்ளார்.
அத்துடன் ஐ.பி.சி தமிழ் வானொலியின் 21ஆவது பிறந்த நாளையொட்டிய சிறப்புப் பாடல் ஒன்றுக்கும் சிவபத்மயன் அண்மையில் இசையமைப்பு வழங்கினார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் தற்பொழுது நடைபெற்றுவரும் வடக்கு-கிழக்கு பிறீமியர் காற்பந்து சுற்றுத் தொடர் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் கிளியூர் கிங்ஸ் அணி மற்றும் திருகோணமலை மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் ரிங்கோ ரைற்றன்ஸ் அணி ஆகிய அணிகளின் சிறப்புப்பாடலுக்காக இசையமைத்திருந்தார்.
தவயோகநாதன் சஜிதரன் எழுதிய மேற்படி பாடல்களுக்கு ரெஜி மோகன் குரல்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








