புலம்பெயர்ந்த மண்ணில் அரசியலில் சாதிக்க துடிக்கும் தமிழனும். காலை வாரி விட துடிக்கும் சதிகார கூட்டமும்.
விஜய் தணிகாசலம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக கனேடிய தேசத்தில் தமிழ் மக்களுக்காக அயராது செயல்பட்டு வரும் துடிப்பான செயல்பாட்டாளர். இவர் ஸ்காபுரோ ரூட்ஜ் பார்க்; தொகுதியின் புரொகிரசிவ் கொன்சவேட்டிவ்; கட்சியின் வேட்பாளர் விஜய் தணிகாசலம் தொடர்பில் தோன்றியுள்ள சர்சைகள் குறித்து ஆராய முனைகின்றது இந்த பதிவு.
விஜய் தணிகாசலம் இந்த தேர்தலில் வெற்றிபெறும் வாய்புகளை அதிகம் கொண்ட தமிழர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் மீதான எதிர் விமர்சனங்கள் தினம் வெளியாகியுள்ளன.
மாகாண சபைக்கான தேர்தலுக்கு சில மணித்தியாலங்கள் உள்ள நிலையில் விஜய் தணிகாசலம் தனது சமூக வலைத் தளம் ஒன்றில் வெளிப்படுத்திய கருத்துக்கள் பல்வேறு விதமான வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தி நிற்கின்றன.
“கடந்த காலங்களில் தமிழ் புலிகள் தொடர்பில் தான் சில விடயங்களை பகிர்ந்து கொண்டதாகவும் அதற்காக மனம் வருந்துவதாகவும் தற்போது தான் அவ்வாறான நிலைப்பாட்டில் இல்லை” என்றும் விஜய் தணிகாசலம் தனது ரூவிட்டர் பக்கத்தில் கருத்துப் பகிர்வினை வெளியிட்டிருந்தார். 
கனடாவின் பிரதான ஊடகம் ஒன்றிற்கு தமிழ் சமூகத்தின் சில பிரதிநிதிகளால் ( இதனை பிரகிருதிகள் என்றும் நீங்கள் வாசிக்கலாம்) விஜய் தணிகாசலம் அவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் குறித்த சில ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த ஆதாரங்களில் ஒன்றில் விஜய் தணிகாசலம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாகவும் மற்றைய பதிவு கரும்புலிகளின் தியாகம் குறித்து அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் கொண்டதாகவும் அமைந்துள்ளதாக குறித்த ஊடக நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கட்டுரை வெளியிடப்படப் போவதாகவும் இது குறித்து கட்சியின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் புரோகிரசிவ் கொன்சவேற்றிவ் கட்சியை தொடர்பு கொண்ட அந்த ஊடகவியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்பு ஒன்றின் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த ஒருவர் அந்த அமைப்பின் தற்கொலைப் போராளிகளை உயர்வாக கருதும் ஒருவருக்கு எவ்வாறு நீங்கள் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கினீர்கள் என்பது அந்த ஊடகவியலாளரின் கேள்வியாக அமைந்திருந்தது.
இந்த கேள்விக்கான பதிலும் இதன் தொடர்ச்சியாக வெளியிடப்படவுள்ள கட்டுரையும் தமது கட்சிக்கும் அதன் வெற்றிக்கும் பாதிப்பாக அமையும் என்று கருதிய கட்சி மேலிடம் விஜய் தணிகாசலம் என்ற “தனது கட்சியின் வேட்பாளரை” இதற்கான பதில் நடவடிக்கையில் ஈடுபடுமாறு பணித்துள்ளது.
அந்த கட்டுரையின் தாக்கத்தை தணிக்கவும் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை குறைக்கவும் விஜய் தணிகாசலம் என்ற வேட்பாளரிடம் இரண்டு தெரிவுகள் தான் இருந்திருக்க முடியும்.
ஒன்று கட்சியின் வேண்டுகோளை புறக்கணித்து இந்த தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவிப்பது.
அல்லது கட்சியின் வேண்டுகோளுக்கு அமைவாக தனது நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்தி முன்னைய கருத்து வெளிப்பாட்டிற்கான மன்னிப்பினையும் கோருவது.
இந்த இரண்டு தெரிவுகளில் எது நீண்டகால நோக்கில் சாதகமானது என்பதை கருத்தில் கொண்டு இரண்டாவது தெரிவினை அவர் எடுத்துள்ளதாகவே எம்மால் உணர முடிகின்றது.
ஆட்சி அதிகாரம் புரோகிரசிவ் கொன்சவேற்றிவ் கட்சிக்கா புதிய ஜனநாயகக் கட்சிக்கா என்ற தளம்பல் நிலையில் உள்ள தேர்தல் களத்தில் தமது வெற்றியை பாதிக்கும் எந்த ஒரு நகர்வினையும் தடுப்பதற்கு அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுப்பது சாதரணமானது. அதனை தான் அந்த கட்சியின் மேலிடம் எடுத்துள்ளது.
மாறாக அவர் கட்சியின் வேண்டுகோளை நிராகரித்திருப்பாராயின் அவரை கட்சியின் வேட்பாளர் நிலையில் இருந்து கட்சி தலைமை நீக்கியிருக்கும்.
அவ்வாறான ஒரு நிலை உருவானால் அதனால் யாருக்கு நன்மை ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவதன் மூலமாகவே இந்த விடயத்தின் பின்னணியை புரிந்து கொள்ள வேண்டும்.
அதனை விடுத்து “அவர்கள்” விரித்த சதி வலையில் நாம் சிக்கி சீரழிவது சமூகத்திற்கு நன்மைகளை ஏற்படுத்தாது.
இவ்வாறான ஒரு நகர்வினை மேற்கொள்ளாமல் விஜய் தணிகாசலம் தேர்தல் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டால் என்ன நன்மைகளை நாம் அடைய முடியும் ?
ஆட்சி அமைக்கும் வாய்ப்புள்ள கட்சியின் சார்பில் தமிழ் பிரதிநிதி ஒருவர் மாகாண சபைக்கு தெரிவாவதை தடுக்கும் செயல்பாட்டுக்கு துணை போவது ஆரோக்கியமானதா ?
இவற்றை ஆராயமல் விஜய் தணிகாசலத்தின் இந்த பதிவால் பூகம்பம் ஏற்பட்டு விட்டது போல் துள்ளிக் குதிப்பதில் என்ன இலாபம்.
விடுதலைப் புலிகள் குறித்த தனது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவே அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை விட வேறு எந்தவிதமான கருத்துக்களையும் அவர் வெளிப்படுத்தவில்லை.
விஜய் தணிகாசலம் தனது கடந்த கால பதிவுகள் குறித்து மனம் வருந்தியமை பாரதூரமான குற்றமாகவும் அவர் மிகப் பெரிய தேசத் தூரோகத்தை செய்து விட்டதாகவும் பலர் அவரை விமர்சிக்கின்றனர்.
சுயலாபத்திற்காக அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டார் என்று கூறும் அளவிற்கு அந்த பதிவை கருத முடியாது என்பது தான் உண்மை.
கட்சியின் அழுத்தம் இறுதி நேர போராட்டம் அவரின் பின்னால் அணி திரண்ட இளைஞர் சமூகத்தின் எதிர்பார்ப்பு என எத்தனை காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டிய நெருக்கடியை அவர் எதிர் கொண்டிருப்பார் எவ்வாறான வலியோடு அவர் அதனை பதிவு செய்திருப்பார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவ்வாறான ஒரு பதிவினை வெளியிடுவதற்கு பின்னால் இருந்திருக்கக் கூடிய அழுத்தங்கள் எவ்வாறனவை என்பதை ஆராயாமல் எழுந்தமானமாக அவரை வசைபாடுவது ஆரோக்கியமானதல்ல.
விடுதலைப் புலிகள் குறித்த தனது கடந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுளதாக மட்டுமே விஜய் குறிப்பிட்டுள்ளார்அதனை தாண்டி தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு குறித்தோ அல்லது தமிழ் தேசியம் சார்ந்த தனது நிலைப்பாட்டை மாற்றியதாகவோ குறிப்பிடாத நிலையில் அவருடை பதிவிற்கு தமது கற்பனையில் வந்துதிக்கும் வரைவிலக்கணங்களை எழுதிக் கிழிப்பதும் பொருத்தமானதல்ல.
எழுதப்பட்ட கருத்தின் உண்மையான அர்த்தம் எழுதியவருக்கு மட்டுமே தெரியும். ஆதனை விடுத்து அதற்கு காது மூக்கு எல்லாம் வைத்து அவர் சொல்லாதவற்றையம் சொல்லி இனி அவ்வாறும் சொல்லக் கூடும் என்று கற்பனையினையும் கலந்து கட்டி பொங்குவது எல்லாம் கொஞ்சம் அல்ல நிறையவே ஓவர்.
அவ்வாறான ஒரு பதிவினை வெளியிடுவதற்கு தூண்டியவர்கள் பற்றிய அக்கறை அற்றவர்களாகவும் அது குறித்த கேள்வி எழுப்பாமலும் இருப்பது தான் வேடிக்கையானது.
விஜய் தணிசாலத்திற்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது இவ்வாறான ஒரு பதிவினை அவர் இடுவதற்கு பின்னால் இருந்த காரணிகள் குறித்து நாம் கவனமாக ஆராய வேண்டும்.
அதனை விடுத்து விஜய் துரோகம் செய்து விட்டார் அவரை ஆதரித்தமை தவறு என்று அவருக்கு எதிராக நீங்கள் சுழற்றும் கம்புகளில் அடிபட்டு விழப்போவது விஜய் தணிகாசலம் என்ற தனி மனிதன் அல்ல கனேடியத் தமிழ் சமூகம் தான்.
விஜய் அவ்வாறு ஒரு பதிவினை இடும் நிலையை ஏற்படுத்துவதற்கு காரணமாக ஆதாரங்களை அந்த ஊடகத்திற்கு வழங்கிய தமிழ் சமூகத்தின் பிரதிநிதியை தியாகி என்று கொண்டாடப் போகின்றோமா ? அல்லது இவ்வாறான துரோகத்தால் பாதிக்கப்பட்டு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஒருவரை மிதித்து அழிக்கப் போகின்றோமா என்பதை தமிழ் சமூகமான நாம் சிந்திக்க வேண்டும்.
தமிழ் சமூகத்தின் மீதான இந்த உளவியல் போர் மிகக் கவனமாக திட்டமிடப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவிற்கு நுணுக்கமான திட்டமிடலும் காய் நகர்த்தலும் எமது மக்களின் அடிப்படை உரிமைகளை வெற்றி கொள்ளவதற்கு பயன்படுத்தப்படாமல் தமிழர்களின் வெற்றியினை தட்டிப் பறிப்பதற்கு பயன்படுத்தப்படுவது தான் சோகம்.
விஜய் தணிகாசலம் என்ற இளைஞனின் பின்னால் அணி திரண்ட தமிழ் சமூகத்தை ஒன்றை இரவில் பிளவு படுத்தி குளிர்காய்கின்றது ஒரு கூட்டம்.
நடந்தவை தெரியாமல் வழமை போலவே அவசர குடுக்கைகளாய் விஜயை தூற்றியும் அவர் மீதான விமர்சன கணைகளை வீசியும் தம்மை புனிதர்களாக்கி மகிழ்கின்றார்கள் மறு பிரிவினர்.
தமிழரின் வெற்றியினை பறிப்பதற்கும் அவரை இழுத்து வீழ்த்துவதற்கும் எப்போதும் காத்திருக்கும் தமிழ் நண்டுகளை தொடர்ந்தும் நாம் காப்பாற்றிக் கொண்டிருக்கப் போகின்றோமா ? என்பதே எம்முன்னாளல் உள்ள மிகப் பெரிய கேள்வி.
தேர்தல் காலத்தில் தமிழ் வேட்பாளர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளும் செயல்பாடுகள் இங்கு இடம் பெறுவது இது தான் முதல் தடைவயல்ல.
ஏற்கனவே இராகவன் பரஞ்சோதி மீதும் இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்டுரைகள் வெளியாகியிருந்தமையினையும் அதானல் அவர் எதிர் கொண்ட அழுத்தங்களையும் நாம் மறந்து விட முடியாது.
2009ம் ஆண்டுக்கு பின்னரான சூழலில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 9 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அந்த அமைப்பின் மீதான தடை மேற்குலக நாடுகளில் தொடர்வதும் அந்த தடையினை நீக்குவதற்கு தமிழ் ‘தேசியம்”; பேசும் போராளிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் தான் இத்தகைய பிரச்சினைகளுக்கு அடிப்படை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதனை விடுத்து நானும் ரௌடி தான் என்பது போல எந்த ஆராய்வும் இன்றி எழுந்தமானதான முடிவுகளை எடுத்து மற்றவர்களை போட்டுத் தள்ளும் போக்கினால் ஆகப் போவது ஒன்றும் இல்லை.
விஜய் தணிகாசலம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னதான பதிவையும் கரும்புலிகளின் தியாகம் குறித்தான பதிவினையும் குறித்த ஊடகத்திற்கு வழங்கிய தமிழ் சமூகத்தின் அந்த பிரதிநிதிகளும் எங்கள் மத்தியில் தானே இருக்கின்றார்கள் அவர்களை நாம் எவ்வாறு கையாளப்; போகின்றோம் ?
இன்று விஜய் தணிகாசலம் நாளை வேறு ஒருவர் என்று இந்த தமிழ் நண்டுகளால் இன்னும் பலர் இழுத்து விழுத்தப்படக் காத்திருக்கின்றார்கள்.
தம்மை தவிர தமிழரை வேறு யாரும் பிரதிநிதித்துவம் செய்யக் கூடாது என மூடிய கூடாரத்திற்குள் இருந்து முழு மூச்சாக இயங்கிக் கொண்டிருக்கும் “அந்த தமிழ் நண்டுகளை “ தாண்டி கனடாவில் தமிழ் சமூகம் வளர முடியாது என்ற உண்மையை தான் இந்த சம்பவம் எமக்கு மீண்டும் மீண்டும் உணர்த்தி நிற்கின்றது.
தாம் ஆதரவளிக்கும் கட்சியின் பின்னால் தமிழ் சமூகம் அணி திரள வேண்டும் இல்லாவிட்டால் மூடிக்கொண்டு முடங்கி கிடக்க வேண்டும் என்று வீரம் காட்டும் அந்த பெரியவர்களை தட்டி வைக்க எங்கள் முடியாத கையாலாகாத்தனம் தானே இத்தனைக்கும் காரணம்.
இது ஒரு சமூகமாக நாம் ஊதி அணைக்க வேண்டிய நெருப்பு இதனை பற்றி எரிய விடுவது மிகவம் ஆபத்தானது இந்த நெருப்பு ஒரு நாள் எம்மமையும் நெருங்கிச் சுடும் அப்போது அது அணைக் முடியாத பெரு நெருப்பாக கொழுந்த விட்டு எரிந்து கொண்டிருக்கும் என்பதே கசப்பான உண்மை.
தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இன அழிப்புத் தான் என்பதை சொல்வதே பெரும் பாவம் என்று சொல்லி “இன அழிப்பு ‘ என்ற பெயரைக் கண்டாலே விலகி ஓடும் உன்னதமானவர்களை நாம் உத்தமர்களாக கொண்டாடுவோம். விஜய் தணிகாசலம் போன்றவர்களை முடிந்த வரை தண்டிப்போம் இது தானே எங்கள் நீதி.
நாளை (07/06/2018) நடைபெறப் போகும் தெர்தலில் விஜய் தணிகாசலம் வெற்றி பெறுகின்றாரோ இல்லையோ தமிழ் சமூகமாக நாம் படுதோல்வி அடைந்து விட்டோம் என்பதே உண்மை.








