டோனியின் புத்தகத்திலிருந்துதான் இளம்வீரர்களாகிய நாங்கள் பாடம் கற்றுக் கொள்கிறோம்.

0
478 views

வங்கதேசத்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் மழை வெற்றி பெற்றாலும், பாலோ ஆன் கொடுக்கப்பட்டதில் தார்மீக வெற்றி இந்திய அணிக்கே. விராட் கோலியின் 5 பவுலர்கள் கொண்ட அணிச்சேர்க்கை பலன் தரும் என்று அவரே கூறுகிறார். அஸ்வின், ஹர்பஜன் இணைந்து 8  விக்கெட்டுகளைச் சாய்க்க வங்கதேச அணி ஃபாலோ ஆனுக்கு தள்ளப்பட்டது.

6-5 என்ற தனது அணிச்சேர்க்கை தீர்மானம் குறித்து டெஸ்ட் கேப்டன் விராட் கோலி கூறும்போது, “அஸ்வினின் டெஸ்ட் போட்டிகளின் பேட்டிங் சராசரி 40 ரன்கள். ஒரு ஆல்ரவுண்டராக அவரிடமிருந்து இதற்கு மேல் என்ன எதிர்பார்க்க முடியும், ஹர்பஜன் சிங்கும் பேட்டிங்கில் ஆடத்தொடங்கினால், அவருடன் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் பேட்டிங்கில் பங்களிப்பு செய்தால் அணியில் 8 பேட்ஸ்மென்கள் ஆகிவிடுவர்.

எனினும் முதல் 6 வீரர்கள் பொறுப்புடன் ஆட வேண்டும், நாங்கள் இந்தத் தேவையை பூர்த்தி செய்வோம் என்றே எதிர்பார்க்கிறேன். ஒரு பவுலிங் யூனிட்டாக போட்டிகளை வெற்றிபெற்றுத் தரும் வீரர்கள் எனக்கு தேவை. மேலும் துணைக்கண்டத்தில் அதிக போட்டிகளை விளையாடவிருப்பதால் ஸ்பின் உட்பட பவுலிங்கை வலுப்படுத்த  வேண்டியுள்ளது.

அஸ்வினும், ஹர்பஜனும் அயல்நாடுகளிலும் சிறப்பாக வீசக்கூடியவர்களே.  இந்த சீசனில் எந்த அளவுக்கு தன்னம்பிக்கை பெறுகிறோமோ அதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல  முடியும். அஸ்வினும், ஹர்பஜனும் இணைந்து வீசுவதைப் பார்க்க ஒரு கேப்டனாக எனக்கு உற்சாகம் அதிகரித்தது. அவர்கள் இருவருமே இணைந்து பந்துவீசுவதை விரும்புகின்றனர்.  இருவரில் ஒருவர் அழுத்தம் கூட்டினால் மற்றவர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்.

 

வெற்றிக்காக போட்டிகளை விளையாடும் போதுதான் ஆட்டத்தை நாம் மகிழ்ச்சியுடன் ஆட முடியும், இதில்தான் எனக்கு நம்பிக்கை உள்ளது. பீல்டிங்கில் தீவிரமும் அணுகுமுறையும் மிக முக்கியமானது. ஏனெனில் அந்த தருணத்தில்தான் 11 வீரர்களும் களத்தில் இருக்கிறோம், அப்போதுதான் ஒரு அணி என்ற ஒருமைப்பாடு ஏற்படுகிறது. எனவே பிட்ச், சூழ்நிலை என்ற தற்காலிகங்களைக் கடந்த தீவிரத்தை பரமாரிக்க வேண்டும். வெற்றி பெறுவதே நோக்கம் என்பதைக் கொண்டிருந்தால் ஆட்டம் எப்போதும் மேம்படும்.

வங்கதேசத்துக்கு எதிரான பதுல்லா டெஸ்ட் போட்டியின் போது, வீரர்களுக்கான ‘டிரஸ்சிங் ரூமில்’(ஓய்வறையில்) தோனியை ‘மிஸ்’ பண்ணியது புதுமையான உணர்வாக இருந்தது. இதே போன்ற ஒரு சூழல் சச்சின் ஓய்வு பெற்ற போதும் ஏற்பட்டது. ஒரு கிரிக்கெட் வீரராக தோனியுடன் தான் பெரும்பாலான நேரத்தை செலவிட்டோம். இவர் சொல்வதை கேட்டோம். அவருடன் பல விஷயங்கள் பற்றி விவாதித்தோம். இவரது அணுகுமுறை அணியுடன் கலந்திருந்தது.

 

இப்படி இந்திய அணியில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு வீரரை திடீரென காண முடியவில்லை. இவரது குரல் மட்டும் எங்கள் மத்தியில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருந்தது. நிறைய இளம் வீரர்களை சிறந்த சர்வதேச வீரர்களாக உருவாக்கியதில் தோனிக்கு பங்கு உண்டு. அவரது புத்தகத்திலிருந்துதான் நாங்கள் பாடம் கற்றுக் கொள்கிறோம். அவர் நிறைய வாய்ப்புகள் வழங்கினார். இப்போது இந்திய கிரிக்கெட்டை மேலும் எடுத்துச் செல்வதன் பொறுப்பு எங்கள் கையில் உள்ளது” என்றார் விராட் கோலி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here