ஜிம்பாவேக்கு எதிரான உலக கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் சுரேஷ் ரெய்னா மற்றும் தோனியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது கடைசி லீக்கில் சனிக்கிழமை ஜிம்பாவே அணியை எதிர்கொண்டது.
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது இதன் படி முதலில் களம் இறங்கிய ஜிம்பாவே அணியின் ஏமாற்றம் அளிக்கும் விதமாக இருந்தாலும், 4 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டெய்லரும் வில்லியம்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக டெய்லரின் ஆட்டத்தில் அனல் பறந்தது அவருக்கு வில்லியம்சும் நல்ல ஒத்துழைப்பு அளித்தார் அஷ்வின், ஜடேஜா ஆகியோர் ஓவர்களில் டெய்லர் சிக்சர்களும் பவுண்டரிகளுமாக அடித்து அட்டகாசப்படுத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்ஸ் 50 ரன்களில் அஷ்வின் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்த டெய்லர் 110 பந்துகளில் 15 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் உட்பட 138 ரன்களில் மோகித் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். டெய்லருக்கு பின் வந்த எர்வின் (27), ராசா(28) பனயங்கார(6), என சீரான இடைவெளியில் ஜிம்பாவே வீரர்கள் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக 48.5 ஓவர்களில் 287 ரன்களுக்கு ஜிம்பாவே அணி ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சமி, உமேஷ் யாதவ் மோகித் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஷ்வின் 75 ரன்கள் விட்டு கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். ஜடேஜாவும் 10 ஓவர்கள் வீசி 71 ரன்கள் விட்டுகொடுத்து விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை.
இதையடுத்து, 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில், தவான் (4), ரோகித் சர்மா (16), என அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். 21 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிக்கொண்டிருந்த நட்சத்திர வீரர் விராட் கோலியும் ரகானேவும் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 3 வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்த நிலையில், ரகானே 19 ரன்களில் ரன் அவுட் மூலம் வெளியேறினார். சிறிது நேரத்தில் விராட் கோலியும் 38 ரன்களில் சிகந்தர் ராசா பந்தில் போல்டு ஆனார். 22.4 ஓவர்களில் இந்திய அணி 92 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது.
5 வது விக்கெட்டுக்கு சுரேஷ் ரெய்னாவுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். நடப்பு தொடரில் பெரிய அளவில் சோபிக்காத ரெய்னா ஆரம்பத்தில் சற்று நிதானமாக ஆடி பின் ருத்ர தாண்டவம் எடுத்தார். அதேநேரத்தில் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழக்கூடாது என்பதிலும் இருவரும் கவனமாக இருந்தனர். தோனியும் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ரசிகர்களை குஷிப்படுத்த தவறவில்லை. இருவரும் களத்தில் நின்றதால் இந்திய அணி சிரமம் இன்றி வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்தது. இந்த ஜோடியை பிரிக்க ஜிம்பாவே பந்து வீச்சாளர்கள் எடுத்த முயற்சிகளை இருவரும் தவிடு பொடியாக்கினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரெய்னா சதம் அடித்தார். உலக கோப்பை போட்டிகளில் ரெய்னா அடிக்கும் முதல் சதம் இதுவாகும். மறுபுறம் தோனியும் அரைசதம அடித்தார்.
நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய இந்த ஜோடி 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது. 48.4 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு தேவையான 288 ரன்களை எடுத்தது. தோனி, வெற்றிக்கு தேவையான ரன்களை தன் வழமையான முறையில் எடுத்து பரவசப்படுத்தினார். இதன் மூலம் இந்திய அணி ஜிம்பாவே அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சுரேஷ் ரெய்னா 110 ரன்களுடனும் (104 பந்துகள்)இ தோனி 85 (76 பந்துகள்) ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பி பிரிவில் இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு வழங்கப்படது. இந்திய அணி வரும் 19 ஆம் தேதி காலிறுதி போட்டியில் வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது.








