வடகிழக்கின் நீண்ட நாள் கனவு இன்று நனவாகியது…….

0
961 views

வடகிழக்கின் நீண்ட நாள் கனவு இன்று நனவாகியது………

இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கு தமிழர் தாயக விளையாட்டுத் துறையில் இருந்த நீண்ட நாள் கனவு ஒன்று இன்றைய தினம் நனவாகியுள்ளது.

தாயகத்தில் உள்ள வீரர்களை ஒருங்கே ஒன்றிணைத்து அவர்களின் ஆடுகளத் திறமையினைப் புடம்போடுகின்ற ஒரு புதிய புரட்சியாகவே இந்த கனவு ஈடேறியிருக்கிறது.

வடக்கு-கிழக்கு பிறீமியர் லீக் (North-East Premier League NEPL) எனும் விளையாட்டுக் குழும அங்குரார்ப்பண நிகழ்வின் மூலமே இது நிறைவேற்றப்பட்டுள்ளது. போருக்குப் பின்னரான ஈழத் தமிழரின் மீழெழுச்சி செயற்பாங்கின் ஒரு அங்கமாகவே இந்த விளையாட்டுக் குழுமம் நோக்கப்படுகின்றது.

நாம் எதற்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பதையும் வீழ்ந்தாலும் வீழ்ந்தே கிடப்பவர்கள் அல்லர் என்பதையும் இன்றைய நாள் உணர்த்தியிருக்கிறது.

வடகிழக்கு, தமிழரின் மரபுரிமைச் சொத்து. கல்வியிலும் சரி விளையாட்டுத் துறையிலும் சரி ஏராளம் சான்றோர்களையும் வீர வீராங்கனைகளையும் கண்ட மண். ஏர்க்கலை, நீர்க்கலை, நூற்கலை மட்டுமன்றி போர்க்கலையிலும் வக்க, வல்லாதிக்கமிக்க மறவர்களைக் கண்ட மண்.

அதன் வாயிலாக எமது மண்ணிலே உள்ள மாபெரும் வீரர்களின் திறமைகள் சரியான முறையில் வெளியுலகிற்குக் கொண்டுவருவதற்கான உரிய களம் இதுவரை அமைத்துக்கொடுக்கப்பட்டது மிகக் குறைவு என்றே சொல்லமுடியும். விளைவாக தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் எம்மவர்க்கு கிடைக்கவேண்டிய பல சந்தர்ப்பங்கள் மாற்றார் கைகளில் தவழ்கின்றன.

இனிமேல் இந்த நிலை மாற்றியமைக்கப்படும் என்பதை வெளிப்படுத்துவதாக இன்றைய தினம் அமைந்துள்ளது. வடக்கின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகப் பலம்வாய்ந்த உதைபந்தாட்ட அணிகளைக் கொண்டதாக இந்த விளையாட்டுக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஏராளம் மக்களின் மத்தியில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் விளையாட்டுக் குழுமத்தின் போட்டி அணிகளும் அறிமுகப்படுத்தப்பட்டதோடு ஆரம்ப நாள் சுற்றுப்போட்டியும் நடைபெற்றது.

முன்னதாக இந்த விளையாட்டுக் குழுமத்தில் உள்ள அணிகளின் வீரா்களுக்கான அடையாள அங்கி (Uniform) அறிமுக விழா ஐ.பி.சி தமிழின் தாயக கலையரங்கில் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெற்றது. ஐ.பி.சி தமிழ் மற்றும் லங்காசிறி ஊடக குடும்பத்தின் தலைவா் கந்தையா பாஸ்கரன் அவர்களால் மேற்படி அடையாள அங்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வீரா்களிடம் கையளிக்கப்பட்டன. இதன்போது அணிகளுக்கான கருத்துவெளிப்பாட்டுப் பாடல்களும் வெளியிட்டுவைக்கப்பட்டன.

பின்னர் மாலை ஏழு மணியை அண்மித்த வேளையில் விளையாட்டுக் குழுமத்தின் அத்தனை அணிகளும் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் சுற்றுத் தொடர் போட்டிக்கான வெற்றிக் கிண்ணமும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

இன்றைய ஆரம்ப போட்டியில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ரிங்கோ ரைய்ரன்ஸ் அணியும் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் கிளியூர் கிங்ஸ் அணியும் மோதியிருந்தன.

வடகிழக்கு தமிழரின் கட்டிறுக்கமான ஒரு விளையாட்டுக் குழுமமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த NEPL குழுமத்தில் மொத்தம் பன்னிரண்டு அணிகள் மோதவுள்ளன.

யாழ்ப்பாணம்- வல்லை ஏப்.சி, நோதா்ன் எலைய்ட் ஏப்.சி, தமிழ் யுனைட்டட் அணி, ரில்கோ கொன்கியூரஸ் அணி
கிளிநொச்சி- கிளியூர் கிங்ஸ்
முல்லைத்தீவு- முல்லை பீனிக்ஸ் அணி
மன்னார்- மன்னார் எப்.சி, மாதோட்டம் எப்.சி
வவுனியா- வவுனியா வொரியஸ்
திருகோணமலை-ரிங்கோ ரைரன்ஸ்
மட்டக்களப்பு- பட்ரி சுப்பர் கிங்ஸ்
அம்பாறை- அம்பாறை அவென்ஜேர்ஸ்
ஆகிய அணிகளே இந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் களங்காணவுள்ளன.

இதேவேளை, வெற்றிபெறும் அணிகளுக்கு மிகப் பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. முதலாம் பரிசாக 50 இலட்சம் ரூபாவும், இரண்டாம் பரிசாக 30 இலட்சம் ரூபாவும், மூன்றாம் பரிசாக 15 இலட்சம் ரூபாவும், நான்காம் பரிசாக 5 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.

வடக்கு-கிழக்கு பிறீமியர் லீக், வீழ்ந்துகிடக்கும் எம் மண்ணின் ஒவ்வொரு விளையாட்டுத் துறைக்கும் நிச்சயம் ஒரு உந்துசக்தியாக விளங்கும் என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை என்றுதான் சொல்லமுடியும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here