யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த 8 ஆம் திகதி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதனைஅறிந்து மாணவர்களும், அரசியல் பிரதிநிதிகளும் மற்றும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதியில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். உடனடியாக பொலிசாரும், விசேட இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு பல்கலைக் கழகத்தினுள் பாதுகாப்புப் கடமையில் ஈடுபட்டு மாணவர்களை வெளியேற்றியிருந்தார்கள்.
மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் தற்போதைய கொரோனா அச்ச நிலை காரணமாக கைவிடப்படுவதாகவும், சில மாணவர்கள் தொடர்ந்தும் உண்ணா விரத போராட்டத்தை முன்னெடுப்பார்கள் எனவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றைய தினம் அறிவித்தல் விடுத்திருந்தது.
இதனால் நேற்று பிற்பகலில் இருந்து 9 மாணவர்கள் ஆரம்பித்துள்ள தீர்வு கிடைக்கும் வரை உணவு தவிர்ப்பு போராட்டம் தற்போது வரை இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரும் இவர்களுடன் இணைந்துள்ளார்.











