றெயின்போ அணியினை 10 ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியன்களாகியது உதயசூரியன் இளையோர் அணி…
வல்வை உதயசூரியன் கழகம் நடாத்தும் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான 19 வயதிற்கு உட்பட்ட வீரர்களுக்கான 09 நபர்கள் கொண்ட மென்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு வைபவமும் 12.10.2019 மாலை மாலை 4.00 மணியளவில் வல்வை றெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
உதயசூரியன் கழகத்தின் தலைவர் திரு.மு.ஜெயதரன் தலைமையில் நடைபெற்ற இறுதிநாள் நிகழ்வுகளில் பிரதம விருந்தினர்களாக திரு.சி.சந்திரலிங்கம் (வல்வை புளூஸ் முன்னால் வீரர், உதயசூரியன் கழக உறுப்பினர்), திரு.சோ.கிருஸ்ணகுமார் (மூத்த உறுப்பினர், உதயசூரியன் கழகம்), திரு.பா.பிரதீபன் (தலைவர், வல்வை விளையாட்டுக் கழகம்) ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இறுதிப்போட்டியில் உதயசூரியன் கழகத்தினை எதிர்த்து றெயின்போ விளையாட்டுக் கழகம் மோதியிருந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற உதயசூரியன் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி துடுப்பெடுத்தாடிய உதயசூரியன் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட ஆறு பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 06 இலக்குகளை இழந்து 52 ஓட்டங்களை குவித்தனர். உதயசூரியன் அணி சார்பாக கயேந்திரன் 18 ஓட்டங்களையும், வசீகரன் 17 ஓட்டங்களையும் தமது அணிக்காக பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் றெயின்போ அணி சார்பாக அபிஷேக் 2 இலக்குகளையும், கானகச்செல்வன் மற்றும் விவேகன் தலா ஓர் இலக்கினையும் வீழ்த்தினர்.
பின்னர் 53 ஓட்டங்களை குவித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய றெயின்போ அணி ஆறு பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 03 இலக்குகளை மாத்திரம் இழந்து 42 ஓட்டங்களை மாத்திம் குவித்தது. றெயின்போ அணி சார்பாக அதிகபட்சமாக கானகச்செல்வன் 19 ஓட்டங்கள், உதயசூரியன் ஆட்டமிழக்காமல் 07 ஓட்டங்களையும் குவித்தனர். பந்துவீச்சில் உதயசூரியன் அணி சார்பாக கயேந்திரன் மற்றும் வசீகரன் தலா ஓர் இலக்கினை கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக 17 ஓட்டங்களையும் குவித்து பந்துவீச்சில் ஓர் இலக்கினையும் கைப்பற்றிய வசீகரன் தெரிவானார்.
தொடராட்ட நாயகனாக தொடரில் 140ற்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்ததுடன், 09 இலக்குகளையும் கைப்பற்றிய கயேந்திரன் தெரிவானார்.
சுற்றுத் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரனாக றெயின்போ அணியின் கானகச்செல்வன் தெரிவானார்.
இச் சுற்றுத் தொடரின் மக்கள் மனங்கவர்ந்த வீரனாக றெயின்போ அணியின் உதயசூரியன் தெரிவானார்.
புதிதாக எமது தாய்க் கழகத்திற்குள் ஓர் சேய்யாக பிறப்பெடுத்திருக்கும் வல்வை ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தினை வரவேற்கும் முகமாக ஓர் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
அத்துடன் இத்தொடரில் பங்குபற்றிய வீரர்கள், வெளிப்படுத்திய பெறுபேறுகளின் அடிப்படையில் ஓர் கனவு அணி தெரிவுசெய்யப்பட்டது. அந்த அணி விபரம் இதோ;
01. கயேந்திரன் (உதயசூரியன்)
02. கௌசிகன் (உதயசூரியன்)
03. நவீன் (உதயசூரியன்)
04. கானகச்செல்வன் (றெயின்போ)
05. விவேகன் (றெயின்போ)
06. சுதர்சன் (இளங்கதிர்)
07. டக்சன் (இளங்கதிர்)
08. மோகன்ராஜ் (வ.ஒற்றுமை)
09. செம்பருத்தி (சைனிங்ஸ்)
10. இந்துசன் (நேதாஜி)
11. கணேஷ் (ரேவடி)
சிறப்பு விருந்தினர்களாக போட்டியில் பங்குபற்றிய உதயசூரியன் கழக மற்றும் றெயின்போ விளையாட்டுக் கழக வீரர்களின் பெற்றோர் கலந்து கொண்டு தமது பிள்ளைகளுக்கான பரிசில்களை அவர்களே வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியில் வெற்றியீட்டிய வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு சுற்றுப் போட்டியினை வெற்றிகரமான தொடராக மாற்றுவதற்கு அனைத்து வழிகளிலும் உதவிய எமது கழக உறுப்பினர்கள் மற்றும் சகோதரக் கழக நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
























































































































