சேர்
—————————————————————————————————————————————-
– -ச.ச.முத்து —
சேர் உங்களை ஏறத்தாள முப்பது வருசத்துக்கும் மேலாக நேரில் காணாததாலோ என்னவோ இன்னமும் அந்த சேர்ட்டை அழகாக கை மடித்து ரௌசருக்குள் நேர்த்தியாக இன் பண்ணிய அந்த தோற்றமே மனதுக்குள் நிற்கிறது. அதுவும் நல்லதுதான் சேர். அந்த தோற்றமே மனதுக்குள் நாங்கள் சாகும்வரை இருக்கட்டுமே.
ஓரிரு நாட்களுக்குள் முன்னர் நீங்கள் இயற்கைஅடைந்த போது உங்களுக்கு 85வயது. மிகமிக சின்னவயது மரணங்களை சலிக்கசலிக்க வலிக்கவலிக்க பார்த்து கேட்டு அனுபவித்திருந்த போதும் உங்கள் மரணம் வாழ்வின் மிக முக்கிய ஏதோ ஒன்று கை விட்டு போன ஒரு உணர்வை தருகிறது. அதுதான் நீங்கள் எங்களுக்குள் ஆழமாக வீற்றிருந்த இடம். இனியும் வீற்றிருக்க போகும் இடமும் என்றே நினைக்கிறேன்.
நன்றியுணர்வு கொஞ்சமும் இல்லாத ஒரு பழங்குடி மனப்பான்மைக்குள் சமூகம் நுழைந்து கொண்டிருக்கிறதா என்ற கவலையும் சந்தேகத்தையும். உங்கள் மரணம் தீர்த்து வைத்திருக்கிறது.
சேர் ஒரு குருவை. ஒரு ஆசிரியரை இத்தனை வருடம் கழிந்த பின்னரும் அவரின் மாணவர்கள் நன்றியுடன் நினைத்து நெக்குருக வைத்து போயிருக்கிறீர்கள். ஓம் சேர் உங்களுக்கு சாகும்போது வயது 85
உங்களின் மாணவர்களுக்கு இப்போது 45க்கு மேலாக இருக்கும். பலருக்கு 60வயதுக்கும் மேல். ஆனாலும் சேர் அதில் மிகப் பலருடன் இந்த ஓரிரு நாட்களில் உங்களை பற்றி கதைத்து இருக்கிறேன்.அப்போது ஒன்றை கவனித்தேன். உங்களை பற்றிய கதையில் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு தருணத்தில் அவர்கள் குரல் கம்முவதை,அவர்கள் மனம் அழுவதை, உடைவதை அவதானித்தேன்.நானும்தான் சேர்.
எதனால் நீங்கள் அவ்வளவு நன்றியறிதலுடன் நினைவு கொள்ளபடுகிறீர்கள் என்று நினைத்து பாhத்தேன்சேர்.
எங்கள் இளம் வயதில் நாங்கள் பார்த்த முதல் கடமை உணர்வு நிறைந்த ஒரு மனிதனாகவே நீங்கள் மனதுள் நிற்கிறீர்கள்.நீங்கள் பெற்ற கல்வியும் அனுபவமும் இந்த கடமை உணர்வின் மீது இன்னும் இன்னும் அழகாக அமர்ந்திருந்தன. வழிகாட்டின.
வகுப்பறைக்கு வருவதே ஏதோ சிங்க கூண்டுக்குள் வருவதுபோல நினைத்து ஏனோ தானோ என்று 45 நிமிசம் கரும்பலகைக்கு முன்பும் கதிரையிலும் இருந்து செல்லும் ஆசிரியர்கள் மத்தியில் எல்லோரையும் ஒன்றாக சமனாக இவன் தேறமாட்டான் இவன் தேறுவான் என்று முன கணிப்பு ஏதுமின்றி கல்வியை அத்தனை நேர்மையுயுடன் தந்தீங்கள் சேர்.
இன்னுமொன்று உங்ளை பற்றின மிக முக்கிய விசயம் சேர்.,படிப்புக்கும் அறிவுக்கும் உள்ள வித்தியாசத்தை எங்களின் அந்த வயதிலேயே எங்களுக்கு அத்தனை அற்புதமாக சொல்லி தந்தீர்கள். அது மட்டுமல்லாமல் நீங்களும் அவ்வாறே. வெறுமனே கூட்டல், கழித்தல், பெருக்கலில், அல்ஜிபிராவின் எக்ஸ் வை களுக்குள், அல்லது விலங்கியல் பாடத்தின் ஏதோ ஒரு முடிச்சுக்குள் நின்று விடுவது மட்டுமே கல்வி இல்லை என்று அதிகமான பொழுதுகள் வெளிக்கள கல்வியையே தந்தீர்கள்.
வல்லை வெளியின் நீரற்று வளரும் தாவரங்கள் பற்றியும் மண்மலைகள் நிறைந்த வடமராச்சி கிழக்கு பகுதிகளின் கடல்நீர் பற்றியும் மழைகாலங்களில் எமது சூழலுக்கு புதிதாக வந்து கிளையமரும் பறவைகளின் இடம்பெயர்தல் பற்றியும். பைதகரிசின் தேற்றம் பற்றி வெளிச்சவீடு கொண்டுபோய் காட்டி சொல்லியதும்.அப்படி சொல்லி கொடுககும்படி மற்றைய ஆசிரியர்களை பணித்ததும்கூட வகுப்பறைக்கு வெளியேதான் அறிவு இருக்கிறது என்பதை காட்டுவதற்கே.
உங்களுடைய ஒழுக்கமும் நேர்த்தியும் கடமை உணர்வுக்கும் ஏற்ப சாரணர் அணியின் ஆசிரியராக பணிப்பாளராக என்று மிக உணர்ந்து வழிகாட்டியதை உங்களிடம் சாரணர்களாக இருந்த என் நண்பர்கள் இப்போதும் சொல்லுவார்கள். சொல்கிறார்கள்.
அதிலும் 70 களின் நடுப்பகுதியில் சிதம்பராவில் நடந்த விஞ்ஞான பொருட் கண்காட்சி யாழ் மாவட்டத்தின் மிகச் சிறப்பான கண்காட்சிகளில் ஒன்று என மெச்சத் தக்க வகையில் வெற்றிகரமாக நடந்ததற்கு பின்னால் உங்களின் உழைப்பு உழைப்பு உழைப்பே நின்றது.அந்த கண்காட்சியின் போது சிதம்பராவின் வாசலில் சவுக்கம் கம்புகளால் நமது சாரணர்கள் ஒரு மிகப்பெரிய கோபுரத்தை உருவாக்கி இருந்தார்கள். அதன் பெயர் அரீனா டிஸ்பிளே என்று நினைக்கிறேன்.
கண்காட்சி ஆரம்பமாக இன்னும் சில நிமிடங்களே இருந்தபோது அந்த கோபுரத்தில் ஏதோ ஒரு திருத்தம் செய்ய என்று சாரணர்களுக்கு சொல்லியது மட்டும் இல்லாமல் நீங்களே அதில’ சரசர என்று ஏறிய அந்த வேலை நேர்த்தி இன்னமும் நினைவுக்குள் நிற்கின்றது சேர்.
எல்லோராலும் பல்கலைகழக அனுமதி பெற முடியாது என்பதை மிக தெளிவாக புரிந்து கொண்டு படிக்கின்ற காலத்திலேயே தொழில்நுட்ப அறிவு பெறுவதற்காக மாணவர்களை உற்சாகப்படுத்தியதுடன்
ரான்சிஸ்ரர் ரேடியோ உருவாக்கும் முறை தொடக்கம் இயந்திர பொறிமுறை வரை எல்லாவற்றும் குழுக்களை உருவாக்கி விஞ்ஞான சோதனைச்சாலைக்குள்ளேயே அதனையும் பிரத்தியேகமாக பாடசாலைநேரங்களிலும் அதன் பின்னரும் கற்பித்தீர்கள் சேர்.
எல்லாவிதத்திலும் ஒரு முழுமையான குருவாக விளங்கி நின்றீர்கள்.
என்றைக்கும் எங்களின் நன்றிக்கு உரியவர் நீங்கள்.
உங்களுடைய மாணவர்களில் ஒருவனாகிய என்னுடைய கண்ணீர் அஞ்சலியை ஏற்றுக் கொள்ளுங்கள் சேர்.
-ச.ச.முத்து –








