யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடத்துக்கான வீடமைப்புத் திட்டத்தில் 4 ஆயிரத்து 600 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலக பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை மாவட்டச் செயலகத்தால் பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. பயனாளிகளின் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் நெடுந்தீவு 50, வேலணை 150, ஊர்காவற்றுறை 75, காரைநகர் 75, யாழ்ப்பாணம் 175, நல்லூர் 175, சண்டிலிப்பாய் 250, சங்கானை 250, உடுவில் 200, தெல்லிப்பளை 1500, கோப்பாய் 550, தென்மராட்சி 600, கரவெட்டி 250, பருத்தித்துறை 150, மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்கு 150 வீடுகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பிரதேச செயலகங்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது பட்டியல் வந்துள்ளதை உறுதிப்படுத்தினர். எனினும் பயனாளிகளின் விவரங்களை உடனே அனுப்புவதில் சிக்கல் உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
பயனாளிகளின் பட்டியல் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், புள்ளிகள் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர் விவரங்கள் தொடர்பான அறிவித்தல்கள் ஆட்சேபனைகள் முறைப்பாடுகளுக்காகக் காட்சிப்படுத்தப்பட்டு ஆட்சேபனைகள், முறைப்பாடுகள் கிடைக்காத பட்சத்தில் அனுப்பி வைக்கலாம்.
ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பின் புதிய பயனாளிகள் தெரிவு போன்றவற்றால் தாமதம் ஏற்படலாம் என்று தெரிவித்தனர்.
வருட இறுதியில் வீடமைப்புத் திட்டப் பட்டியல்கள் அனுப்பப்பட்டுள்ளதால் பயனாளிகளின் பட்டியல் மாவட்டச் செயலகத்துக்குப் பிரதேச செயலகங்களால் அனுப்பப்பட்டு அங்கிருந்து மீள்குடியேற்ற அமைச்சுக்கு அனுப்பி அங்கிருந்து அங்கீகாரம் கிடைப்பதற்குள் வருடம் முடிந்து விடும்.
வருடம் முடிவதற்குள் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்க வேண்டுமென்பதால் பயனாளிகள் ஆரம்பக் கட்டப் பணிகளை ஆரம்பிக்க சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படுமென்று பொதுமக்கள் முறைப்பாடு கூறுவர்.
மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து வீட்டுத் திட்டங்களுக்கும் ஒரே நேரத்தில் அத்திபாரக் கற்கள், மணல்கள் பறிக்கப்பட வேண்டும். பயனாளிகளின் அவசரத்துக்காக கற்கள், மணல் போன்றவற்றின் விலைகள் திடீரென அதிகரிக்கலாம்.
இதனால் பயனாளிகளுக்கு வீட்டுத் திட்டத்துக்கு வழங்கப்படும் தொகையைவிட மேலதிகமாகச் செலவு ஏற்படலாம் என்று தெரிவித்தனர்.







